‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான குரல் மற்றும் மிரட்டலான வில்லன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன் தாஸ், தற்போது ‘அநீதி’, ‘ரசவாதி’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் முத்திரை பதித்துள்ளார். ‘பாம்’ திரைப்படம் மூலம், ஒரு முழு ஹீரோவாக தனது நடிப்பு பரிமாணத்தை அர்ஜுன் தாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
‘பாம்’ படத்தில் அர்ஜுன் தாஸின் குரல் அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. இதுவரையிலும் கேங்ஸ்டர் அல்லது நகர இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், இப்படத்தில் எந்தவித ஹீரோயிச அம்சமும் இல்லாமல், ஒரு கிராமத்து இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.
அவரது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அப்பாவித்தனமான, நல்ல மனது கொண்ட கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் அசத்தியுள்ளார். ‘பாம்’ படத்தில் அவரது நடிப்பு, இதுவரை அவர் நடித்த படங்களிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. பல காட்சிகளில் தனது முதிர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், இரட்டை கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பை வழங்கியிருந்தார். குறிப்பாக, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் நடனமாடியபடியே நுழைந்தது, பிரியா வாரியருடன் “தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா” பாடலுக்கு ஆடிய நடனம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதைத்தொடர்ந்து, ‘பாம்’ படத்தில் கிராமத்து இளைஞனாக, நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்திலும் திறம்பட நடித்துள்ளார்.

“நான் நடித்த படங்களிலேயே மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சவாலான அனுபவத்தை கொடுத்தது இந்த பாம் படம்தான்” என்று படத்தின் வெளியீட்டிற்கு முன் அர்ஜுன் தாஸ் தெரிவித்திருந்தார். தற்போது படம் வெளியாகி அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு வித்தியாசமான கதைக்களத்தில், திறமையான நடிகர், நடிகைகளைக் கொண்டு உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படம், அர்ஜுன் தாஸின் திரை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ஒன்ஸ்மோர் படத்தின் ரிலீஸுக்காகவும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மிரட்டல் வில்லனாக நடிப்பதை விட யதார்த்தமான ஹீரோவாக அர்ஜுன் தாஸ் ஸ்கோர் செய்கிறார் என அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
