மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’. அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அரசியல் மற்றும் சமூக பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், ஒரு மனிதனின் லட்சிய கனவையும், அதை சுற்றி பின்னப்படும் சவால்களையும் மையமாக கொண்டு உருவாகி உள்ளது. கொள்கை சார்ந்த உலகத்திற்கும், பொது நினைவுகளுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் போராட்டமே வங்காள விரிகுடா. கடற்கரை சார்ந்த வாழ்வியல், தனிமனித மோதல்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு ஆக்ஷன் டிராமாவாக எடுக்கப்பட்டுள்ளது.
நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, ரஜினிகாந்த் பாணியில், வெள்ளை விஜயகாந்தாக திரை முழுவதையும் தன்வசப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தட்டி கேட்கும் அதிரடி, மனைவியிடம் காதல், முன்னாள் காதலி மீது அக்கறை, அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் அமைதியான குணம், ஏழை மக்களுக்கு உதவும் கொடை பண்பு, என்று தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களையும் தன் ஒற்றை உருவத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி என்று இரண்டு கதாநாயகிகளும், கமர்ஷியல் நாயகிகளாக பாடல்கள் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாகவும் பயணித்திருக்கிறார்கள். பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஏராளமான புதுமுகங்கள், தங்களுக்கு என்ன வேலை என்றே தெரியாமல் அவ்வபோது தலைகாட்டி செல்கிறார்கள். திராவிட தலைவர்களையும், தமிழ் சினிமா நாயகர்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவு ஓகே தான். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இப்படத்தை தோளில் சுமந்திருக்கும் குகன் சக்கரவர்த்தியின் சினிமா ஆசை தீவிரமாக மட்டும் இன்றி தீயாக அவர் நெஞ்சில் கொழுந்து விட்டு எரிவது, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. குறிப்பாக நடிகராக அவரது ஒவ்வொரு அசைவுகளும் மாஸ் ஹீரோக்களே மிரண்டு போகும் வகையில் செம மாஸாக இருக்கிறது.மாஸான ஆக்ஷன் கதையாக தொடங்கும் படம் பிறகு குடும்ப டிராமா வழியில் பயணித்து பிறகு சஸ்பென்ஸ் திரில்லர் பாதைக்கு திரும்புகிறது. இப்படி பல ஜானரில் பயணிக்கும் திரைக்கதை, பல எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் பலவித குழப்பங்களையும் பார்வையாளர்கள் மனதில் உண்டாக்குகிறது. ஒரு நடிகராக கவனம் ஈர்க்கும் குகன் சக்கரவர்த்தி, இயக்குநராக பார்வையாளர்களை கதிலங்க வைத்திருக்கிறார். இப்படியும் ஒரு படமா…! என்று ஆச்சரியப்பட வைப்பவர், பல இடங்களில், இதெல்லாம் ஒரு படமா…!, என்று அதிர்ச்சியளிக்கவும் செய்கிறார்.
