நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள “கர” திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே டீசர் மற்றும் ட்ரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. இந்த படத்தில் தனுஷுடன் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டியராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.

திருவெறும்பூர் பகுதியில் இருக்கும் எம்.எல்.ஏ. வீட்டில் திருடி மாட்டிக்கொள்ளும் தனுஷ் மீது பொய் வழக்குகளை போட்டு பெயர் வாங்க நினைக்கிறார் போலீஸ் அதிகாரி சுராஜ் வெஞ்சாரமூடு. இதையடுத்து சுராஜை தாக்கிவிட்டு தப்பிக்கும் தனுஷ், தனது காதல் மனைவி மமிதா பைஜூவுடன் ரேணிகுண்டாவில் ஒரு ஓட்டலில் வேலைபார்க்கிறார். கஷ்டம் அவரை துரத்தி துரத்தி அடிக்க சொந்தமாக ஓட்டல் வைக்க நினைக்கிறார். இதனால் தனது தந்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் நிலத்தை விற்று பணத்தை கேட்பதற்காக ஊருக்கு வருகிறார் தனுஷ். ஆனால் அவர்களின் நிலமே வங்கியில் அடமானமாக இருப்பது தெரியவர அதிர்ந்து போகிறார். ஒருகட்டத்தில் வங்கி அதிகாரிகள் நிலத்தை ‘ஜப்தி’ செய்ய வரும்போது, கே.எஸ்.ரவிகுமார் உயிரிழந்து போகிறார். சொந்த நிலத்திலேயே தந்தையின் உடலை அடக்கம் செய்யவிடாமல் வங்கி அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். திரும்பும் திசையெங்கும் பிரச்சினைகள் சுற்றி வளைக்க, சூழ்நிலைக் கைதியாகும் தனுஷ் எடுக்கும் அடுத்தக்கட்ட முயற்சிகள் என்ன? என்பதே கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், அசுரதனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன், காதல், தந்தை பாசம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக தந்தை சென்டிமென்ட்டில் கண்கலங்க வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜூ எதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். தந்தையாக நடித்து இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிந்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் மிரட்டலான நடிப்பால் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். வங்கி அதிகாரி ஜெயராம், மாமா கருணாஸ், பிரித்வி பாண்டியராஜ் ஆகியோர் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

வங்கி கொள்ளை, விவசாய நிலம் மீட்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இருக்கிறார். வங்கி ஊழியர்களின் செயல், பொது மக்களின் அவலநிலை ஆகியவற்றை பேசி இருக்கிறார். வங்கி லோன், மாத தவணை, ஆகியவற்றில் மக்கள் படும் அவதி ஆகியவற்றை தைரியமாக சொல்லி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கதையோடு பயணித்து இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
96tv – ரேட்டிங் – 4/5

