கர்நாடக இசை உலகில் மிகப்பெரிய புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், வயது முதிர்வின் காரணமாக அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார். நாளுக்கு நாள் அவரது நினைவுகள் மங்கத் தொடங்க, குடும்பத்தினரும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள். இதற்கிடையே, தந்தையின் இசை மரபிலிருந்து விலகி தனக்கென ஒரு வாழ்க்கையை தேர்வு செய்து வாழும் அவரது மகனுக்கும், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இடையே பல வருடங்களாக மனக்கசப்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், நோயின் தாக்கத்தால் குடும்ப உறவுகள் புதிய திருப்பத்தை சந்திக்கின்றன. இறுதியில் தந்தை – மகன் இடையேயான பிளவு சரியானதா? குடும்பத்திற்குள் மறைந்து கிடக்கும் காயங்கள் ஆறினவா? இசை மீண்டும் அவர்களை ஒன்றிணைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரா, சாருகேசி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். வெற்றியின் உச்சத்தை தொட்ட சங்கீத சாம்ராட் என்ற அடையாளத்தோடும், மகனால் அவமதிக்கப்படும் ஒரு சாதாரண தந்தை, என்ற இரண்டு விதமான பரிமாணங்களை தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பு கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், அதை தனது உடல் மொழி மூலம் சமாளித்து சரி செய்து விடுகிறார். சாருகேசியின் மனைவி பத்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஹாசினி, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அவரது நடிப்பில் பல இடங்களில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், அவரது திரை இருப்பு மற்றும் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சாருகேசியின் மகனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் மற்றும் மருமகளாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், இருவரும் வயதுக்கு ஏற்ற துள்ளலோடு நடிப்பில் மிளிர்கிறார்கள். இருவரும் சாருகேசியை எதிரி போல் பாவித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் மீது கோபம் ஏற்பட வைக்கிறது.

சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சஞ்சய்.பி.எல் கேமராவை ஒரு இடத்தில் வைத்து விட்டால், மறுநாள் தான் வேறு இடத்திற்கு மாற்றுவார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு காட்சிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே பயணிக்கிறது. வசனங்கள் அதிகம் என்பதால், சஞ்சய்க்கு பணிச்சுமையும் குறைவாகவே இருந்திருக்கும் என்பது திரையில் தெரிகிறது. கானா பாடல்களுக்கு பெயர் போன தேவா, கர்நாடக சங்கீத இசையில் மிரட்டியிருக்கிறார். தன் தேனிசை மூலம் மெலோடி பாடல்களை திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக கொடுத்தாலும், அதில் தனது பழைய பாடல்களின் இசையை ஒலிக்க செய்து பழைய நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். பின்னணி இசை அளவு. சாருகேசி என்ற மனிதரின் வாழ்க்கை புத்தகத்தை படித்தது போன்ற ஒரு உணர்வை தரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட். பா.விஜயின் பாடல்களும், வசனமும் தூணாக நின்று படத்தை தாங்கியிருக்கிறது. இருப்பினும் படத்தில் இடம்பெறும் வசனங்கள், தத்துவங்கள், நம்பிக்கை தரும் குட்டி கதைகள் அனைத்துமே அதர பழசாக இருப்பது படத்தை சற்று பலவீனப்படுத்துகிறது. சாருகேசி என்ற இசைக்கலைஞரின் நேர்மையான வாழ்க்கையை தன் கதை மூலம் நேர்மையாக கையாண்டிருக்கிறார் வெங்கட். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா, மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அளிக்கும் ஒரு படைப்பாக சாருகேசியை படைத்திருக்கிறார். மேடை நாடகம் திரைப்படம் ஆகும்போது, மேடையில் செய்ய முடியாத பல மாயாஜாலங்களை திரையில் செய்ய முடியும் என்றாலும் அதை தவிர்த்துவிட்டு, சாருகேசி என்ற மனிதரையும், அவர் எதிர்கொள்ளும் வலி மற்றும் சோதனைகளை கடந்து நிகழ்த்தும் சாதனையை பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
