தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் விஜய் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை பிக்பாஸ் ஜனனி கொடூரமாக தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். தனது மகன் மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தியது ஏன் என்பதை கண்டுபிடிக்க விஜய் ஹரியின் தாய், காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் விசாரணையை தொடங்குகிறார். அப்போது ஜனனியின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன. மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய குற்றம் ஒன்று நடைபெற்றிருப்பதும் தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்ல, ஜனனி அப்படி செய்ய காரணம் என்ன? உண்மையில் நடந்தது என்ன? நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, முதல் முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில், ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். கோபம் மற்றும் பழிவாங்கும் உணர்வு என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கும் ஜனனி தனது நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருப்பவர், அதில் நம்பும்படி பயணித்து பாராட்டு பெறுகிறார்.

காவல்துறை அதிகாரியாகவும், ஜனனியின் காதலனாகவும் நடித்திருக்கும் விஷாகன், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் ஹரி விஜய், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் கெளஷிக், கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். வழக்கறிஞராக நடித்திருக்கும் அபிஷேக் சங்கர், ஜனனியின் தந்தையாக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மோகன்குமார், இரவு நேர காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் தரமாக காட்சிப்படுத்தியுள்ளார். ஒளியமைப்பு மற்றும் கோணங்கள் ஆகியவற்றின் மூலம் தேர்ந்த ஒளிப்பதிவர் என்பதை நிரூபித்திருக்கும் மோகன்குமார், படம் முழுவதையும் தரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எம்.அபுபக்கரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் என்றாலும், பின்னணி இசை பலே… சொல்ல வைக்கும் ரகம்.

தினேஷின் படத்தொகுப்பு முதல் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் உடையாமல் கதையை நகர்த்திச் செல்வதோடு, இரண்டாம் பாதியில் திருப்பங்களை சரியான முறையில் தொகுத்து திரைக்கதையை விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கிறது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பழிவாங்கும் படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து தனது கதையை வித்தியாசப்படுத்தி காட்டும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஏ.கே.குமார், கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தை உணர்வுப்பூர்வமாக கையாண்டிருக்கிறார். பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்தாலும், அவர்களுக்கான தண்டனை எதாவது ஒரு வழியில் வழங்கப்பட வேண்டும், என்ற கருத்தை சாட்டையடியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.கே.குமார், அதை சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
