கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நண்பர்கள் பிளாக் ஹோல் எனப்படும் ஒரு மர்மமான வீட்டில் தங்குகின்றனர். ப்ரோன் மூலம் உணவை தேடும் டிராவிட் ஒரு பழைய கட்டடத்தில் வசிக்கும் சித்தியைக் கண்டு அவரது அழகில் மயங்குகிறார். அவர் மீது காதல் கொள்கிறார். தனது பாட்டியால் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என முதலில் மறுக்கும் சித்தி அதன் பின் டிராவிட் காதலை ஏற்றுக் கொள்கிறார். சூனியக்காரி பாட்டியான தேவதர்ஷினியிடம் ஒரு கட்டத்தில் சிக்கி கொள்ள அதன்பின் நாயகன் டிராவிட் எப்படி அங்கிருந்து தப்பித்தார். அதற்கு அவரது நண்பர்கள் எப்படி உதவினர் என்பதே ட்ரோன்ஸ் திரைப்படத்தின் கதை.
பாட்டி கதையையும், பறக்கும் தட்டு என்ற கற்பனையையும் வைத்து இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத் எழுதியிருக்கும் திரைக்கதை, அழகி, சூனியக்காரி, அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றுடன் நிற அரசியலையும் சேர்த்து நகைச்சுவையாக கொடுத்திருப்பதோடு சிந்திக்க வைக்கவும் செய்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, அழகில் தேவதையாகவும், நடிப்பில் அரக்கியாகவும் கவனம் ஈர்க்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், நிற பாகுபாடு பார்ப்பவர்களுக்கு தன் நடிப்பு மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் அஞ்சலி நாயர், அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் டிராவிட் செல்வம், காமெடி கதாபாத்திரம் என்பதால் அதற்கான அனைத்து அம்சங்களையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தி, கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

சூனியக்காரியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி வித்தியாசமான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பும், கடுமையான உழைப்பும் அந்த கதாபாத்திரத்தை உயர்த்தில் உட்கார வைத்து விடுகிறது.
காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ், தன் அளவான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். குரேஷி வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஆர்.ஜே.தீபக் மற்றும் சசி செல்வராஜ் ஆகியோரும் தங்களது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகளை காட்சிப்படுத்தினாலும், கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பணியாற்றியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆர்-ன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, கலை இயக்குநர் ஆர்.கிஷோர், ஆடை வடிவமைப்பாளர் ஹர்ஷிகா ரமேஷ் ஆகியோரது பணி படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
நாம் படித்த அழகி மற்றும் சூனியக்கார கிழவி கதைக்கு வேறு ஒரு வடிவத்தை கொடுத்ததோடு, அதை அறிவியல் பின்னணியில் நகைச்சுவையாக சொல்லி சிரிக்க வைத்திருக்கும் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத், சிந்திக்க வைக்கும் ஒரு விசயத்தையும் படத்தில் பேசியிருப்பது பாராட்டுக்குரியது.
முதல் பாதி படம் பார்வையாளர்களை சற்று சோர்வடைய செய்தாலும், இரண்டாம் பாதி படம் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. எதிர்பார்க்காத திருப்பங்கள் மற்றும் சமூக பிரச்சனை ஆகியவற்றை மேலோட்டமாக கையாண்டிருந்தாலும், அதை காமெடி பின்னணியில் கவனம் ஈர்க்கும் வகையில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, என அனைத்து தரப்பினரும் கொண்டாடக்கூடிய ஒரு கலகலப்பான படத்தை கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

