
ராஜுவும், மைக்கேலும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ராஜுக்கு பெண்கள் என்றாலே பயம். நாயகி பவ்யாவை கல்லூரியில் பார்த்து பேசியதும் ராஜுக்கு பயம் பறந்து போய் விடுகிறது. இதிலிருந்து பவ்யாவும் ராஜுவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். பவ்யாவை ஒருதலையாக காதலிக்கும் மைக்கேல், ராஜுவிடம் சண்டை போட்டு பிரிகிறார். இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு புறம் ராஜுவின் தாய் சரண்யா, பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆதியாவோ விஜே பப்புவை காதலித்து வருகிறார். இறுதியில் ராஜுவின் காதல் என்ன ஆனது? சண்டை போட்டு சென்ற நண்பர் மைக்கேல் மீண்டும் ராஜுவுடன் சேர்ந்தாரா? பக்கத்துவீட்டு பெண் ஆதியாவை திருமணம் செய்யும் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ராஜு, எதார்த்தமாக நடித்திருப்பதோடு, காமெடிக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். அதே சமயம், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவாக பார்வையாளர்களை ஈர்ப்பவர், திரைக்கதையின் திருப்பங்களின் போது கதாபாத்திரங்களில் ஒருவராக கலந்து, கதாநாயகன் என்ற அந்தஸ்தை இழந்து விடுகிறார். கதையின் போக்கும் அவ்வாறே பயணிப்பதால் நாயகன் ராஜு காணாமல் போய்விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா அழகிலும், நடன அசைவுகளிலும் கவனம் ஈர்ப்பதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். பவ்யாவுக்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கும் மற்றொரு நாயகி ஆதியா தனது துறுதுறு நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறார். ஆதியாவின் காதலனாக நடித்திருக்கும் விஜே பப்பு, வரும் காட்சிகளில் சிரிப்பு சத்தம் காதை பிளக்கிறது. நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் மைக்கேலின் நடிப்பிலும் குறையில்லை. சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்தாலும், அவர்கள் வழக்கமாக செய்வதை கொஞ்சம் ஓவராக செய்து பார்வையாளர்களை சற்று சலிப்படைய வைத்துவிடுகிறார்கள். கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை முதன்மை கதாபாத்திரங்களிடம் இருக்கும் இளமைக்கு ஏற்ப பயணித்து பார்வையாளர்களை பரவசமடைய செய்கிறது. ஒளிப்பதிவாளர் பாபு குமார்.ஐ.இ, படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத், தற்போதைய இளைஞர்கள் காதல், நட்பு, பெஸ்ட்டி, காதல் திருமணம், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட உறவுகளை பார்க்கும் விதமும், அதனால் பாதை மாறும் வாழ்க்கையையும் விவரிக்கும் வகையில் கதை, திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இது 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்பதை தெளிவுப்படுத்தினாலும், இளைஞர்களை கவர்வதற்கு இப்படிப்பட்ட விசயங்களை வைக்க வேண்டுமா? என்று தோன்றுகிறது. இத்தகைய விசயங்களை ஒருசிலர் ரசித்தாலும், பெரும்பாலான இளைஞர்கள் வெறுப்பார்கள் என்பதை இயக்குநர் உணரவில்லை. ஜெயித்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கோத்தோடு, இளைஞர்களுக்கு பிடிக்கும் என்ற கண்ணோட்டத்தில் சில குப்பை காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது, நல்ல கதையை சிதைக்கும்படி செய்திருக்கிறது. கருத்து சொல்கிறேன், அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் அதர பழசான விசயங்களை பேசி சில இடங்களில் மொக்கை போட்டிருக்கும் இயக்குநர் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் அதில் இருந்து பார்வையாளர்களை காப்பாற்றியிருக்கிறார். ஆனால், அந்த நிலை அதிக நேரம் நீடிக்காமல் போக, மீண்டும் பழைய பாணியில், சிறந்த நண்பனை திருமணம் செய்து கொள்ளலாமா? என்ற கேள்வியை முன்வைத்து அதற்கு விளக்கம் கொடுத்திருப்பது, பல வருடங்களுக்கு முந்தைய தமிழ் சினிமாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இருந்தாலும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் வித்தியாசமாகவும், ரசிக்கவும் வைக்கிறது. நல்ல கதையாகவும், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவாக காட்டக்கூடிய களமாகவும் அமைந்தும் இயக்குநரின் தடுமாற்றத்தால் கொண்டாடி தீர்க்க வேண்டிய படம், ”என்ன கொடுமை சரவணன்”, என்று புலம்ப வைத்திருக்கிறது.