
17 ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. நாயகன் பவன் கல்யாண் ஊரில் சின்ன சின்ன திருட்டு செய்து இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார். ஒரு பக்கம் முகலாயர்கள் இந்துக்கள் வாழும் பகுதிகளை அழித்து நாட்டை தன்வசமாக்கி வருகிறார்கள். அப்படி இந்துக்களை அடிமையாக்கி பல மாகாணங்களை தன்வசமாக்கி வைத்து இருக்கிறார் பாபி தியோல். மேலும் இவர் கோஹினூர் வைரத்தை வைத்து இருப்பதால், அதை திருடி கொடுக்க பவன் கல்யாணுக்கு அழைப்பு வருகிறது. இதை ஏற்றுக் கொள்ளும் பவன் கல்யாண், பாபி தியோலை தேடி செல்கிறார். இறுதியில் பவன் கல்யாண் கோஹினூர் வைரத்தை கண்டு பிடித்தாரா? பாபி தியோல் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துக்களை பவன் கல்யாண் மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முகலாய மன்னர்களின் வீரம், ஆட்சி, போர், கட்டிடக்கலை உள்ளிட்ட பெருமைகளை மட்டுமே அறிந்திருக்கும் இந்திய மக்களுக்கு அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் அனுபவித்த துன்பங்களை விவரிப்பதோடு, அதில் இருந்து அவர்களை காப்பாற்ற இந்து மதத்தில் இருந்து வீரன் ஒருவன் உருவெடுத்தான், என்ற கற்பனையை பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடனுடனும், மாஸ் காட்சிகளுடனும் மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா. ஹரி ஹர வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன் கல்யாண், படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். இந்து மதத்தின் பெருமை பேசுவது, ஏழைகளுக்கு உதவுவது, இஸ்லாமிய மக்களுடன் நட்பு பாராட்டுவது என்று முழுக்க முழுக்க அரசியல்வாதியாகவே பயணித்திருப்பவர், தனது சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தி அசத்துகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வாலுக்கு பெரிய வேலை இல்லை, என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரது முகம் காட்சிக்கு காட்சி மாற்றத்துடன் காணப்படுகிறது. மேக்கப்பின் சொதப்பலா அல்லது அவரது உடல் அழகியல் மருத்துவத்தின் சொதப்பலா என்று தெரியவில்லை.
முகலாய மன்னர் அவுரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். முகலாய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், தனது கண்கள் மூலமாகவே இந்துக்கள் மீதான தனது இனவெறியை வெளிக்காட்டி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் கீரவாணியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. தாளம் போடும் வகையிலும், முனுமுனுக்கும் வகையிலும் பாடல்களை கொடுத்திருப்பவர், பின்னணி இசையின் மூலம் படத்தின் மாஸ் காட்சிகளுக்கே மாஸ் காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர் வி.எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளில் குறை இருந்தாலும், அதை மறைக்கும் விதத்தில் ஒளிப்பதிவாளர்களின் பணி அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல், கலை இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோரது பணியும் கவனம் ஈர்க்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா வரலாற்று கதையோடு தனது கற்பனை கதையையும் சேர்த்து, பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார். இந்து மதத்தை அழிக்கும் முகலாய மன்னர்களின் முயற்சிகள் மற்றும் இந்து மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடுமைகளை காட்சிப்படுத்திய விதம் சற்று செயற்கையாக தெரிவதோடு, மத அரசியலை முன்னிறுத்துபவர்களுக்கான பிரச்சாரமாகவும் இருக்கிறது. படத்தில் இடம்பெறும் மதம் சார்ந்த வசனங்கள் மற்றும் காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் முழுமையான பொழுதுபோக்கு படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.