சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று நாயகன் குமரன் தங்கராஜ் முயற்சி செய்து வருகிறார். இவரது இலட்சியம் திரைவேறாமல் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் வருத்தம் அடைகிறார். ஒரு கட்டத்தில் தன் தாத்தா ஜி.என்.குமாரை படம் தயாரிக்க சொல்லி கேட்கிறார். சரி என்று சொல்லும் ஜி.என்.குமார், திடீரென்று இறந்து விடுகிறார். அவர் இறந்த பிறகு ரூபாய் 20 கோடி மதிப்புள்ள வீட்டின் உயிலை நான்கு பங்காக பிரித்து வைத்து இருப்பது குமரனுக்கு தெரிய வருகிறது. நான்கு பங்காக இருப்பது குமரனுக்கு பிடிக்கவில்லை. இறுதியில் ஜி.என்.குமார் எழுதி வைத்த உயிலில் நான்கு பங்கு யாருக்கு? ஏன் குமரனுக்கு பிடிக்கவில்லை? இறுதியில் இயக்குனராகும் லட்சியம் குமரனுக்கு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரையில் ஜொலித்த குமரன் தங்கராஜ், முதல் படத்திலேயே காமெடி, ஆக்ஷன், காதல் என முடிந்தவரை ‘ஸ்கோர்’ செய்துள்ளார். முக பாவணைகளிலும் திறமையை பளிச்சிட செய்துள்ளார். பாயல் ராதாகிருஷ்ணா அழகாலும், நடிப்பாலும் கவருகிறார். ஜி.எம்.குமார், குமாரவேலின் அனுபவ நடிப்பு கவனிக்க வைக்கிறது. பால சரவணனின் காமெடி பரவாயில்லை. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்தை நகர்த்த உதவியுள்ளன. பாடல்கள் ஓகே ரகம். வித்தியாசமான, கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சலிப்பு தட்டும் திரைக்கதை பலவீனம். நாடகம் போல காட்சிகள் நகருகிறது. ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பார்ப்பது போல இருக்கிறது. வழக்கமான கதைக்களம் என்றாலும், அதில் புதுமையான காட்சிகளை புகுத்தி கலகலப்பாக படத்தை நகர்த்தியுள்ளார், இயக்குனர் பாலாஜி வேணுகோபால். குமாரவேலின் இறப்புக்கான காரணம் சொல்லுமிடம் புதுமை.
