
உசிலம்பட்டியில் வாழ்ந்து வரும் விக்ரம் பிரபு, 33 வயதான நிலையில் திருமணம் நடக்காமல் இருக்கிறது. இவருக்கு எந்த பெண்ணும் அமையாததால், இவரது உறவினர்கள், ஊர் காரர்கள் அனைவரும் எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் கோபிச் செட்டிபாளையத்தில் இருக்கும் நாயகி சுஷ்மிதாவை விக்ரம் பிரபு பெற்றோர்கள் நிச்சயம் செய்கிறார்கள். இதற்காக குடும்பத்தினர் அனைவரும் திருமணம் நிச்சயம் செய்ய கோபிச் செட்டிபாளையம் செல்கிறார்கள். நிச்சயம் செய்த பின் லாக்டவுன் போடுவதால் பெண் வீட்டிலேயே அனைவரும் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. லாக்டவுன் இருப்பதால் ஒருவாரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் நாயகி சுஷ்மிதா வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். இறுதியில் திருமணம் கனவோடு இருக்கும் விக்ரம் பிரபுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? சுஷ்மிதா எதற்காக வீட்டை விட்டு சென்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
விக்ரம் பிரபு திருமணம் ஆகாத சோகத்துடன் வலம் வந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் அடக்கி வாசித்தாலும் இறுதியில் பொங்கி எழும் காட்சியில் கூட அளவாக நடித்து ரசிகர்களை கவரும் விக்ரம் பிரபு, நடிப்பில் இதுவரை பார்த்திராத வித்தியாசத்தை இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட் சில காட்சிகளில் அழகாக இருக்கிறார், சில காட்சிகளில் அதிகம் வயதுள்ளவர் போல் தெரிகிறார். இருந்தாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் என அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பிலும் குறையில்லை. எழுதி இயக்கியிருக்கும் சண்முக பிரியன் காதல் கதையை, கலகலப்பான குடும்ப கதையாக இயக்கியிருக்கிறார். காதல் கொஞ்சமாக இருந்தாலும், கலகலப்பும், பொழுதுபோக்கும் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் அதிகம் பேசுவதும், ஒரே இடத்தில் கதை நகர்வதும் சற்று குறையாக தெரிந்தாலும், குடும்பத்தோடு பார்க்க கூடிய முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கிறது.