
சூர்யாவின் தந்தை ஜோஜு ஜார்ஜின் தொழிற்சாலையில் வாட்ச் மேனாக வேலைப்பார்த்து வருகிறார். ஒரு நாள் திடீரென அவர் இறந்து விடுகிறார். குழந்தை இல்லாத ஜோஜு ஜார்ஜ் தம்பதி சூர்யாவை எடுத்து வளர்க்கின்றனர். தன் தந்தையின் இறப்பை நேரில் பார்த்ததால் அதில் பாதிப்படைந்து சிறுவயதில் இருந்தே சூர்யாவிற்கு சிரிப்பு வராமல் இருக்கிறது. தொடக்க காலத்தில் ஜோஜு ஜார்ஜின் மனைவி மட்டும் தான் சூர்யா மீது அன்பாக இருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் மீது சிறு வெறுப்புடனே இருக்கிறார். சூர்யாவிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் அவருக்கு சிரிப்பு வரும் என கூறுகின்றனர் அதனால் இவருக்கு சண்டை பிடிப்பதனால் சூர்யா கராத்தே கற்றுக்கொள்கிறார். சிறுவயதில் இருந்தே தாய் இல்லாத பூஜா ஹெக்டே-வை சூர்யா காதலித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் சூர்யா பெரிய கேங்ஸ்டர் ஆகும் சூழ்நிலையில். பூஜா ஹெக்டேவிற்காக சண்டை, யுத்தம், வன்முறை என அனைத்தையும் விட்டுவிட்டு திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஆனால் திருமண நாள் அன்று இவரது வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜ் கும்பலுடன் சண்டை ஏற்படுகிறது. இதில் சூர்யா ஒரு கொலை செய்ததால் சிறைக்கு செல்கிறார். பூஜா ஹெக்டே சூர்யாவை வெறுத்துவிட்டு அவரை விட்டு பிரிகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? சூர்யா விட நினைத்தாலும் அவரை விடாமல் துரத்தும் பிரச்சனை, வன்முறை என்ன? பூஜா ஹெக்டேவுடன் மீண்டும் இணைந்தாரா? முற்றிலும் வன்முறையை சூர்யாவால் கைவிட முடிந்ததா? என்பது பரபரப்பான மீதி கதை.
90 காலகட்டத்தை குறிப்பிடும் படத்தில் ஸ்டைலான லுக்கில் சூர்யா அசத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். சிரிப்பு தெரியாமல் வளரும் சூர்யா சிரிக்க முயற்சி செய்யும் காட்சிகள் நேர்த்தி. மேக்கப் இல்லாத முகமாய் அழகான நடிப்பால் கவர்கிறார் பூஜா ஹெக்டே. நெளிவான அவரது நடனம் ரசிக்க வைக்கிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு ஆர்ப்பரிப்பை கூட்டுகிறது. சுஜித் சங்கரின் வில்லத்தனம் பயமுறுத்துகிறது. சிரிப்பு டாக்டராக வரும் ஜெயராம், கருந்தீவின் தலைவனாக வரும் நாசர் ஆகியோரும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளனர். பிரகாஷ் ராஜின் அனுபவ நடிப்பும் கை கொடுத்து இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக கண்களுக்கு விருந்து அளிக்கின்றன. 90 காலகட்டத்தை கண்முன் நிறுத்தி வியப்பை தருகிறார். சந்தோஷ் நாராயணனின் இசை ஆட்டம் போட வைக்கிறது. கனிமா பாடலுக்கு விசில் பறக்கிறது. லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், விறுவிறுப்பான காட்சிகள் அதை மீறி ரசிக்க செய்கின்றன.
காதல் சிரிப்பு யுத்தம் என்ற கூட்டணி கலவையில், கணக்கே உரிய பாணியில் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்து உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சூர்யா – பூஜா ஹெக்டே திருமண நிகழ்வை சொல்லும் 15 நிமிட காட்சியை ஒரே சிங்கிள் ஷாட் ஆக எடுத்திருப்பது அவரது முத்திரையைக் குறிக்கிறது. கங்குவா படத்தின் தோல்வியை அடுத்து வெளியான ரெட்ரோ படம் சூர்யாவுக்கு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது.