
மூணாறு பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். அனைவரும் கல்லூரியில் எதோ ஒரு மர்மம் இருக்கிறது என நம்புகின்றனர். இதனை அறிவியல் ரீதியாக கண்டுப்பிடிப்பதற்காக பேய் மற்றும் நெகெடிவ் வைப்ரேஷன்ஸ் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஆதியை அழைக்கின்றனர். ஆதி நெகடிவ் வைப்ரேஷன்ஸ் கண்டு பிடிக்கும் ஒரு கருவியை வைத்து கல்லூரி முழுவதும் அவரது ஆய்வை தொடங்குகிறார். அவரது ஆய்வில் சில மர்மங்களை கண்டுப்பிடிக்கிறார். லட்சுமி மேனன் அதே கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருக்கிறார். கல்லூரியில் நடக்கும் அசாம்பாவிதங்கள் முன்கூட்டியே கனவில் அவருக்கு தெரிய வருகிறது. கல்லூரியில் இருக்கும் மர்மம் என்ன? ஆதி அதனை முறியடித்தாரா? கல்லூரி மாணவிகள் மரணத்திற்கு என்ன காரணம்?
ஆவிகளைப் பற்றிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளும் நபராக நடித்திருக்கும் ஆதி, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோ என்றாலும் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வெளிப்படுத்தி கதையின் நாயகனாக பயணித்திருக்கும் ஆதி, தனது வேலையை மிகச்சரியாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறாரநாயகன் ஆவியின் பின்னணி குறித்து கண்டுபிடிப்பவராக இருந்தால், நாயகி நிச்சயமாக ஆவியால் பாதிக்கப்படவராக தான் இருப்பார், என்ற வழக்கமான கதாநாயகி வேடத்தில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். வழக்கமான வேடமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் ஆகியோர் திரைக்கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அனைவரும் இரண்டாம் பாதியில் ஒரே சமயத்தில் கதைக்குள் நுழைவதால் அவர்களின் தாக்கம் படத்தில் பெரிதாக இல்லை. இருந்தாலும், அவர்களது திரை இருப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
சீரியசான காட்சிகளில் சிரிக்க வைக்கிறேன், என்ற பெயரில் ரெடின் கிங்ஸ்லி கடுப்பேற்றுகிறார். அதிலும், ஆவிகள் பற்றி ஆதி மேற்கொள்ளும் விசாரணையின் போது அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் ரம்பமாக பார்வையாளர்களை அறுத்தெடுக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா ஆகியோர் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், திகில் படங்களுக்கு ஏற்ற வண்ணத்தை கச்சிதமாக பயன்படுத்தி காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சப்தம் தான் படத்தின் மையக்கரு என்பதால், பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கும் தமனின் உழைப்பு திரையரங்க ஸ்பீக்கர்கள் மூலம் பிரமாண்டமாக வெளிப்படுகிறது. ஒலிக்கலவை செய்திருக்கும் டி.உதயகுமார் மற்றும் சவுண்ட் டிசைன் பணியை மேற்கொண்டிருக்கும் சிங் சினிமா ஆகியோர் படத்திற்கு தூணாக பயணித்திருக்கிறார்கள்.
‘ஈரம்’ படம் மூலம் தண்ணீரில் ஆத்மாவை பயணிக்க வைத்து பார்வையாளர்களை அலற வைத்த இயக்குநர் அறிவழகன், இதில் சப்தங்கள் மூலம் ஆவிகளை பயணிக்க வைத்திருக்கிறார். ஆன்மாக்களின் உணர்வுகளை சப்தங்கள் மூலம் வெளிக்காட்டி, அதன் மூலம் பார்வையாளர்களுக்கு பயம் காட்ட முயற்சித்திருக்கும் அறிவழகன், குறிப்பிட ஒரு காட்சியில் சில நொடிகள் வெறும் சப்தத்தை வைத்தே படம் பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கிறார்.
முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் நம்மை ஏதோ பண்ணுவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி பயத்தில் உறைய வைத்தாலும், இரண்டாம் பாதியில் முக்கிய கதாபாத்திரங்கள் மொத்தமாக அறிமுகமாகி சத்தங்கள் மூலம் சண்டைப் போட்டுக்கொள்வது சற்று வித்தியாசமாக இருந்தாலும், எதற்கான சண்டை என்று சில பார்வையாளர்களுக்கு புரியாதவாறு இருக்கிறது. அதேபோல், பிளாக் மேஜிக்கின் பின்னணியை இன்னும் கூட தெளிவாக சொல்லியிருக்கலாம், என்று தோன்றுகிறது.