நாயகன் சிவா கடற்கரை ஓரத்தில் விடிவி கணேஷ் நடத்தி வரும் உணவு விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரில் வசிக்கும் பிரியா ஆனந்தும் காதலித்து வருகிறார்கள். ஒரு நாள் கடற்கரை ஓரத்தில் யோஷினோரி தாஷிரோ என்ற ஒருவர் மயக்க நிலையில் இருக்கிறார். இவரை சிவா மற்றும் குழுவினர் காப்பாற்றுகிறார்கள். இதிலிருந்து யோஷினோரி தாஷிரோ, சிவாவுடன் பயணிக்க ஆரம்பிக்கிறார். மல்யுத்த வீரர் போல் யோஷினோரி தாஷிரோ இருந்தாலும் குழந்தை போல் நடந்துக் கொள்கிறார். யாரிடமும் பேசாமல் குழந்தை போல் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். இவரால் சிவாவிற்கு பண நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், யோஷினோரி தாஷிரோ யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார். இதில் யோஷினோரி தாஷிரோ ஜப்பான் நாட்டில் பெரிய மல்யுத்த வீரர் என்று சிவா தெரிந்துக் கொள்கிறார். ஆனால், ஜப்பான் நாட்டிற்கு சிவாவால் அனுப்ப முடியவில்லை. இறுதியில் யோஷினோரி தாஷிரோவை சிவா ஏன் அனுப்ப முடியவில்லை? யோஷினோரி தாஷிரோ ஏன் குழந்தை போல் நடந்துக் கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தனக்கு தானே கொடுத்துக் கொண்டு, தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ளும் சிவா, வழக்கம் போல் நடிக்காமல் பேசிக்கொண்டு காட்சிகளை கடத்தியிருக்கிறார். நடிக்க தான் தெரியாது என்றால், மனுஷனுக்கு காதல் கூட செய்யத் தெரியவில்லை. அதனால், தான் அவருக்கும், ஹீரோயினுக்கு பெரிய அளவில் ரொமான்ஸ் காட்சிகள் வைக்கவில்லை. நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த், அழகு மற்றும் கவர்ச்சி நிறைந்த நடிக்க கூடிய நடிகை என்றாலும், அவரது சிறப்பம்சங்களை சரியாக பயன்படுத்தாமல் அவரை வீணாக்கியிருக்கிறார்கள்.
யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் ஆகியோர் செய்யும் காமெடி போதாது என்று, நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களையும் காமெடியர்களாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தாலும், கடி தான் அதிகம். நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பிள்ளையார் பற்றிய பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். மற்ற பாடல்கள் திரைக்கதையை நிரப்ப மட்டுமே பயன்பட்டிருக்கிறது. பின்னணி இசை அளவு. ஒளிப்பதிவு ராஜீவ் மேனன் என்பது டைடில் கார்டில் மட்டும் தான் தெரிகிறது. அவரது கேமராவுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை.
நடிப்பதோடு, படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கும் சிவா, காமெடி வசனங்கள் பற்றாக்குறையால் தவித்திருக்கிறார். எப்படியாவது யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களை வைத்து சமாளித்து விடலாம் என்று முயற்சித்திருப்பவர் அங்கேயும் திரைக்கதையாசிரியராக பெரும் தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறார். கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமின் ஒரு கமர்ஷியல் படத்தை, கமர்ஷியல் அம்சங்களே இல்லாமல் இயக்கியிருக்கிறார். காமெடி தான் திரைக்கதையின் பலம் என்றாலும், அதை சரியாக கையாளாமல் திணறியிருக்கிறார். குறிப்பாக பிரியா ஆனந்த் போன்ற ஒரு ஹீரோயினை வைத்துக் கொண்டு படம் முழுவதையும் வறட்சியாகவே நகர்த்திச் செல்வது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. சுமோ மல்யுத்த வீரரை சுற்றி கதை நகர்ந்தாலும், அந்த வீரருக்கான பின்னணி கதை வழக்கமானதாகவும், சுமோ விளையாட்டு போட்டி பற்றிய கூடுதல் மற்றும் யாரும் அறிந்திராத தகவல்கள் படத்தில் இல்லாததும், திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனம்.
