சிறுவயதில் இருந்தே தாய் மற்றும் தந்தையை இழந்து வாழ்ந்து வருகிறார் கதாநாயகனான ரியோ ராஜ். இதனால் இவரது மனநிலை எந்த ஒரு உறவு முறையும் நீண்ட காலத்திற்கு நிலைக்காது எல்லாமே அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கட்சேரியின் மூலம் கதாநாயகியான கோபிகாவை சந்திக்கிறார் ரியோ. நாளடைவில் இருவரும் பேசி பழகுகிறார்கள். கோபிகாவிற்கு ரியோ மீது காதல் ஏற்படுகிறது ஆனால் ஆரம்பத்தில் ரியோ இதனை தவிர்த்து வருகிறார். பின் இருவரும் ஒருக்கட்டத்தில் காதலில் ஈடுப்பட்டு நெருங்கி பழகி வருகின்றனர். இவர்களது காதலை தெரிந்து கொண்ட கோபிகாவின் வீட்டில் அவரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து ரியோவுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்கின்றனர். இந்நிலையில் கோபிகா ரமேஷ் கர்ப்பம் ஆகிறாள். இதை தெரிந்துக் கொண்ட ரியோ குழந்தையை களைத்து விடலாம் என கூறுகிறார் ஆனால் கோபிகா களைக்க வேண்டாம் என கூறுகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

ரியோராஜ் நவநாகரிக இளைஞனாக கவனம் ஈர்க்கிறார். எதார்த்தமான அவரது நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. காதலை வெறுக்கும் போதும், பின்னர் காதலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போதும் அவரது நடிப்பு பாராட்டை அள்ளுகிறது. அழகான நடிப்பால் கோபிகா வசீகரிக்கிறார். காதலில் ஈடுபடுவது, ரொமான்ஸ் பிறகு பிரேக் அப் என பல்வேறு பரிமாணங்களில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை கொட்டியுள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பணிக்கர், அருணாச்சலம், துளசி சிவமணி, பாசி ஹிராயா, சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. படத்துடன் ஒன்ற செய்கின்றன. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உயிரோட்டம். பின்னணி இசையும் பிரமாதம்.
படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே தொய்வு இருந்தாலும், இரண்டாம் பாதியில் பரபரப்பான கதைக்களம் அதை மறக்கடிக்க செய்கிறது.

வழக்கமான காதல் கதை என்றாலும் அதில் எதார்த்தங்களையும், உணர்வுப்பூர்வமான காட்சிகளையும் ஒருங்கிணைத்து, ரசிக்கும்படியான கதையாக கொடுத்து கவனம் ஈர்க்கிறார், அறிமுக இயக்குனர் ஸ்வினீத் சுகுமார். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.
