
கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்ஸ்டாகிராமில் கணவன் – மனைவி இணைந்து காணொலி துணுக்குகளை வெளியிட்டு வைரலாகி, பின் என்னென்ன விடியோக்களை போட்டால் அதிக பணம், வைரலாவோம் என சிந்தித்து, அதனால் தவறான முடிவுகளை எடுப்பதால் என்னென்ன சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்? என்பதுதான் கதை. கொஞ்ச விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்றெல்லாம் சமூக வலைதளங்களில் முக்கியமாக இன்ஸ்டாகிராமில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே பலரும் பல விஷயங்களை, அந்தரங்க தகவல்களை வெளியிடுகின்றனர். உண்மையில், நாமெல்லாம் நல்ல இணைகள்தானா என்பதையே அறியாமல் விடியோக்களில் சிரித்து, பிறருக்கு ‘இல்லற’ அறிவுரைகளை வழங்கும் இன்ஸ்டா இணைகள் தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு குறைகளுடன், புரிதலற்று, ரகசியங்களுடன் இருக்கின்றனர் என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக ‘டிரெண்டிங்’ பேசுகிறது.
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன் மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா இருவரும் முழுப்படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை மையமாக கொண்டு வடிவமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகளை தங்களது இயல்பான நடிப்பு மூலம் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலையரசன் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு பாராட்டு பெற்றிருக்கிறார். பல இடங்களில் வசனம் பேசாமல் தனது கண்களின் மூலமாகவே நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திர குணாதிசயங்கள் மாற்றம் அடையும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். நடனம் மூலம் அறியப்பட்ட நடிகை பிரியாலயா, இந்த படத்தில் சிறந்த நடிகையாக முத்திரை பதித்துள்ளார். நாயகனுக்கு இணையான வேடத்தில், போட்டி போட்டு நடித்திருப்பவர் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்து விடுகிறார். சிறிய வேடம் என்றாலும் பிரேம் குமாரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. பெசண்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோர் வருகை திரைக்கதையின் திருப்பத்திற்கு உதவியிருக்கிறது.
ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தடுமுட்டு சத்தங்களை தவிர்த்துவிட்டு பின்னணி இசையை அளவாக கையாண்டிருக்கும் சாம்.சி.எஸ், மர்ம நபரின் குரல் மற்றும் அவரது எண்ட்ரி பீஜியம்களை கவனம் ஈர்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், சில இடங்களில் விறுவிறுப்பாகவும், பல இடங்களில் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்பவும் காட்சிகளை தொகுத்திருக்கிறார். யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் அதற்காக பல்வேறு யுத்திகளை கையாள்கிறார்கள். குறிப்பாக தங்களது அன்றாட வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துக் கொள்வதோடு, சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் நடந்து வருகிறது. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக மட்டும் இன்றி எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ். தம்பதியின் யூடியுப் சேனல் திடீரென்று டெலிட் ஆவது, அந்த நேரத்தில் ரியாலிட்டி ஷோ பற்றிய அழைப்பு, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என படம் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், அதனால் தம்பதி சந்திக்க இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் பார்வையாளர்கள் யூகிப்பது போலவே இருக்கிறது. இருப்பினும், பிரேம் குமாரின் வருகைக்குப் பிறகு தொடங்கும் இரண்டாவது சீசன் போட்டியும், அதில் தம்பதிக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.
ஒரே இடத்தில் நடக்கும் கதை, போட்டியின் மூலம் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் யூகிப்பது போல் இருப்பது ஆகியவை திரைக்கதையை தொய்வடைய செய்தாலும், கலையரசன் மற்றும் பிரியாலயா நடிப்பு படத்தை சற்று ரசிக்க வைத்து விடுகிறது.