
நாயகன் கார்த்திக் மற்றும் நாயகி அனுவும் காதலித்து வருகிறார்கள். சொந்த வீடு வாங்கினால் மட்டுமே அனுவை கல்யாணம் செய்து தருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் அனுவின் தந்தை. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த கார்த்தி பாடுபட்டு ஒரு சொந்த வீட்டை வாங்குகிறார். அனுவையும் திருமணம் செய்துகொள்கிறார். அனு கார்த்திக் இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் குடும்ப வாழ்க்கையை தொடங்க இருக்கும் நேரத்தில் தான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. கார்த்திக் கஷ்டப்பட்டு வாங்கிய இதே வீட்டில் பேய் இருப்பது தெரிவருகிறது. பேய் இருக்கும் இந்த வீட்டை விட்டு கார்த்திக் அனு ஓடினார்களா தங்கள் வீட்டை காப்பாற்றிக்கொள்ள போராடினார்களா என்பது ஹவுஸ் மேட்ஸ் படத்தின் கதை.
பிரபஞ்சம் எப்படி தோன்றியது, அதன் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளுக்கு அறிவியல் இன்னும் முழுமையான பதில் அளிக்கவில்லை. இவை தத்துவார்த்த மற்றும் அறிவியல் தேடல்களின் மூலம் ஆராயப்படுகின்றன. அந்த வகையில், அறிவியலில் நம்ப முடியாத பல விசயங்களுக்கு விடை தேடப்பட்டு வருகிறது. அப்படி ஒரு தேடல் தான் இந்த படத்தின் கதைக்கரு. படத்தின் கதையை எளிதில் யூகித்துவிடும்படி டிரைலரை வெளியிட்ட இயக்குநர் டி.ராஜவேல், படத்திற்குள் மிகப்பெரிய அறிவியல் ஆச்சரியத்தை வைத்திருப்பதோடு, அதை சுற்றி நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி பார்வையாளர்களுக்கு புரியவும் வைத்திருக்கிறார். ஆனால், அவர் சொன்ன விளக்கம் புரிந்தாலும், ஏற்றுக்கொள்வதற்கான சரியான தீர்வை சொல்லவில்லை என்பது படத்திற்கு சற்று பலவீனமே. கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களையும், அதனுடன் பயணிக்கும் கதையின் மாந்தர்களின் உணர்வுகளையும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்கள் மனதில் கடத்தி அவர்களையும் அந்த வீட்டினுள் பயணிக்க வைத்திருக்கிறார். ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார். மிகவும் சவால் நிறைந்த பணியை படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். கலை இயக்குநர் என்.கே.ராகுலின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல், நம்ப முடியாத விசயத்தை கதைக்கருவாக எடுத்துக் கொண்டாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை அறிவியல் அடிப்படையில் அமைத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார்.
கிளைமாக்ஸில் சொல்லப்படும் விசயங்களும், அதற்கான தீர்வும் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், வசனங்கள் மூலம் அவற்றுக்கும் தீர்வு கொடுத்திருக்கும் இயக்குநர் ராஜவேல், அதை காட்சிகள் மூலம் விவரித்திருந்தால், பார்வையாளர்கள் முழுமையாக திருப்தியடைந்திருப்பார்கள். பல ஆச்சரியங்கள், சில குழப்பங்கள் இருந்தாலும், தனது முதல் படத்தை புதிய முயற்சியாகவும், சவால் மிகுந்ததாகவும் இயக்கியிருக்கும் இயக்குநர் டி.ராஜவேலை தாராளமாக பாராட்டி வரவேற்கலாம்.