ஊருக்கு ஒதுக்குபுறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை கிடக்கிறது. போலீசார் நாலாபுறமும் தேடியும் உடல் கிடைக்காததால், சிக்கல் எழுகிறது. வெட்டப்பட்ட தலையுடன் ஒரு கடிதமும், லட்சக்கணக்கில் பணமும் கிடக்கிறது. அந்த கடிதத்தில், ‘என் தலையை அடக்கம் செய்து, பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட விஜய் சேதுபதி யார்? என்ற விசாரணையை தொடங்குகிறார்கள். ஊர் ஊராக சென்று விசாரிக்கும் போலீசாரின் விசாரணையில் விஜய் சேதுபதி பற்றி பல தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன. பல அதிர்ச்சிகரமான உண்மைகளும் வெளிச்சத்துக்கு வருகிறது. விஜய் சேதுபதி யார்? அவரது கொலைக்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கு விடையாக நகருகிறது மீதி கதை.
விஜய் சேதுபதி நடித்த முதல் மற்றும் தமிழில் உருவான மிகப்பெரிய இணையத் தொடர் என்ற அடையாளத்தோடு வெளியாகியிருக்கும் ‘காட்டான்’ தொடரின் முதல் அத்தியாயத்திலேயே வெட்டப்பட்ட தலையுடன் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்த அத்தியாயங்களில், பல்வேறு அவதாரங்களில் பயணித்தாலும், ஏதோ பெரிதாக செய்யப் போகிறார், என்பதை உணர வைக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
பல ஊர்களில், பலவிதமான பணி செய்பவராக அறியப்படும் விஜய் சேதுபதி, அனைத்திலும் மனிதத்தை மதிக்கும் நபராக பிரதிபலிப்பது அவரது கதாபாத்திரன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. கைக்கடிக்கார பழுது நீக்கும் கடை பணியாளர், யானை பாகன், ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திர பின்னணியோடு வலம் வரும் விஜய் சேதுபதி, தனது இயல்பான நடிப்பால் அத்தனை கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொறுந்துவதோடு, அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துகுமார், காவலர்களாக நடித்திருக்கும் சிங்கம் புலி, வடிவேல் முருகன், பார்வதி, பாலாஜி சக்திவேல், ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நக்ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா என தொடரில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பல காலக்கட்டங்களில், பல்வேறு பகுதிகளில் பயணிக்கும் கதைக்கு தனது பின்னணி இசை மூலம் உயீரூட்டியிருக்கும் ராஜேஷ் முருகேசன், சில தனித்துவமான பீஜியம்கள் மூலம் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் இருவரது பணியும் தொடரை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கதை பல்வேறு பகுதிகளில் பயணித்தாலும், ஒரே மாதியான வண்ணங்களை பயன்படுத்தி காட்சிகளுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்கள். கலை இயக்குநர்கள் ஜாக்கி மற்றும் சாபு மோகன் ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பு செய்து இயக்கியிருக்கும் பி.அஜித் குமார், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் முத்து கதாபாத்திரத்தை மையப்படுத்திய ஒரு முடிச்சு போடுகிறார். அந்த முடிச்சியை அடுத்த அத்தியாயத்தில் அவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கும் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடையும் விதத்தில், அடுத்த அத்தியாயத்தில் புதிய முடிச்சு போடுகிறார். இப்படி மூன்று அத்தியாயங்கள் வரை, முத்து யார் ? என்ற கேள்விக்கு ஒரு தெளிவான பதிலை சொல்லவில்லை என்றாலும், அதை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தி தொடரை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். கதை எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன், இணையத் தொடருக்கான சஸ்பென்ஸுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்றாலும், எளிய மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளின் மூலம் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.
எளியவர்களுக்காக பயணிக்கும் முத்து என்ற நபர் எப்படி ‘காட்டான்’ ஆனார், அவரது வாழ்க்கைப் பயணம் எப்படிப்பட்டது, என்பது தான் கதையாக இருக்கும் என்று யூகித்தாலும், அதை சுவாரஸ்யமாக சொல்வதோடு, தனது வழக்கமான பாணியில் எளியவர்களின் வாழ்வியலாகவும், அதில் இருக்கும் சுவாரஸ்யங்களையும் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு ஆச்சரியங்களோடு சுவாரஸ்யமாக பயணித்தாலும், விஜய் சேதுபதி கதாபாத்திரம் இடம்பெறாத காட்சிகளில் தொடர் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக விஜய் சேதுபதியை தவிர்த்து தொடரில் இடம்பெற்றுள்ள பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான பல காட்சிகள் திரைக்கதைக்கு தேவையில்லாததாக இருப்பதோடு, தொடரை சற்று தொய்வடைய செய்து விடுகிறது. இருந்தாலும், முத்து யார் ? என்ற கேள்வியும், அதற்கான பதிலாக விஜய் சேதுபதியின் பயணமும் தொய்வை நீக்கி தொடரை ரசிக்க வைத்து விடுகிறது.
