சாலை வசதி கூட இல்லாத எளிய கிராமத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் சிறுமி கல்பனா (சாத்விகா). பள்ளிக்கூடத்தில் நடந்த அறிவியல் விண்வெளி கோலரங்க வகுப்பில் அறிவியல் செயற்பாட்டாளர் நாசர் சிறுமி கல்பனாவுக்கு விண்வெளி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். இதனால் உந்தப்பட்ட கல்பனா தான் ஒரு விண்வெளி வீரராக உருவாக ஆசைப்படுகிறார். என்ன தான் ஆசை இருந்தாலும் தன்னுடைய குடிகார தந்தையால் வலுக்கட்டாயமாக கிருஷ்ணாவுக்கு (துல்கர் சல்மான்) திருமணம் செய்து வைக்கப்படும் கல்பனாவின் கனவு அதன்பின் என்ன ஆனது? என்பதே ஏ ஓ டி திரைப்படத்தின் கதை.
மாஸான அறிமுக காட்சியோ அல்லது அதிரடி சண்டைகளோ இல்லை என்றாலும், துல்கர் சல்மான் பார்வையாளர்கள் மனதில் பதிந்துவிடும் வகையில் தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். இப்படி ஒரு மனிதரா!, என்று ஆச்சரியப்படும் விதத்தில் எழுதப்பட்ட கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கும் துல்கர் சல்மான், தனது அளவான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் வணங்க வைத்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சாத்விகா வேதவல்லி, தனது கனவு, ஆசை, எதிர்பார்ப்பு, பயம் என அனைத்து உணர்வுகளையும் வார்த்தைகளால் அல்லாமல் தனது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

ஸ்ருதி ஹாசன், ருஹானி ஷர்மா, நாசர், கெளதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவின், காசி ரெட்டி, சைதன்யா ஜொன்னலகட்டா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், கிராமத்தின் அழகையும், கதாபாத்திரங்களின் மனதில் இருக்கும் கனவுகளின் பிரமாண்டத்தையும் பார்வையாளர்கள் மனதில் கடத்தியிருப்பதோடு, நடிகர், நடிகைகளை அழகாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனதை வருடும் விதத்தில் பயணிக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அளவாக பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்வேதா சபு சிரில் ஆகியோரது பணி படத்தின் தரத்தையும், சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பவன் சதினேனி, பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், தான் கண்ட கனவை நினைவாக்க பயணிப்பது மட்டும் சாதனையல்ல, மற்றவர்களின் கனவு நினைவாக பயணிப்பதும், அதில் வெற்றி பெறுவதும் சாதனை தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலும், தந்தையாகவும், சகோதர்களாகவும் இன்றி கணவராகவும் ஒரு பெண்ணின் கனவை நிறைவேற்ற முடியும், என்ற அறிவுரையை, சுவாரஸ்யமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் பவன் சதினேனியை வெகுவாக பாராட்டலாம்.
