‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சிதம்பரத்தின் இரண்டாவது படம். சிறையில் இருந்து தனது மகன் ஆதிசேஷன் உடன் வெளியே வரும் பர்சானா, கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை ஓட்டுகிறார். தாங்கள் யார்? என்ற உண்மையை யாருக்கும் சொல்லாமல், தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஒவ்வொரு வேலையாக செய்து இடம் மாறியே சென்று கொண்டிருக்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் பிரச்சினைகள் அவர்களை துரத்த ஒவ்வொரு இடமாக குடிபெயர்ந்து போகிறார்கள். அந்த வகையில் பர்சானாவுக்கு வயதான ஒரு மூதாட்டியை கவனித்துக் கொள்ளும் வேலை அமைகிறது. அந்த வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வரும் பர்சானா, தனது மகனையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். அந்த வீட்டிலும் அவருக்கு பிரச்சனைகள் வெடிக்கிறது ஒரு கட்டத்தில் அந்த மூதாட்டியும் இறந்து போகிறார். உண்மையிலேயே பர்சானா யார்? தனது அடையாளங்களை மறைத்து அவர் வாழ வேண்டிய அவசியம் என்ன? அவரை தொடர்ந்து பிரச்சினைகள் துரத்துவது ஏன்? இந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல், வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மன போராட்டத்தையும், அச்சத்தையும் தன் கண்களின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் ஒருவித குற்ற உணர்ச்சியிலும், அச்சத்திலும் பயணிக்கும் அவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர், அம்மாவுக்கு இணையாக தன் உணர்வுகளை கண்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பவர், எந்த ஒரு இடத்திலும் தான் யார் ? என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மவுனமாக இருந்தாலும், தன் அம்மாவின் தேடலையும், ஏமாற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி கனவம் ஈர்க்கிறார்.வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினன், பிரிந்த அம்மாவை தேடும் பயணத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், பழிவாங்கும் தன் உணர்ச்சியை கச்சிதமாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸின், திரை இருப்பு மற்றும் வித்தியாசமான தோற்றம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிரிஷ் ஏ.டி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், முதன்மை கதாபாத்திரத்தின் வடிவமைப்பு போல், அமைதியான சூழல்களில் காட்சிகளை படமாக்கி, லொக்கேஷன்களையும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார். சுஷின் ஷாம் இசையில் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் அழுந்தங்கள் மற்றும் பரபரப்பை அதிகரிக்கச் செய்கிறது. எளிமையான கதை, சாதாரணமான கதாபாத்திர வடிவமைப்பு என்றாலும், படத்தின் துவக்கத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்து விடும் வித்தையை படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் சிறப்பாக செய்திருக்கிறார். போகும் இடம் தெரியாத ஒரு பயணம், அதில் நிகழும் பிரிவு என்று மிக எளிமையான கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் கதையாசிரியர் ஜித்து மாதவன், பரபரப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் கவர்ந்து விடுகிறார்.

’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை தொடர்ந்து சிதம்பரம் இயக்கியிருக்கும் இப்படம், துவக்கம் முதல் இறுதி வரை இறுக்கமான கதாபாத்திரங்கள் மற்றும் அமைதியான சூழல்களோடு பயணித்தாலும், யூகிக்க முடியாத திருப்பங்களோடு சுவாரஸ்யமான படமாக நகர்வதோடு, சிறந்த திரை உணர்வை கொடுக்கும் படைப்பாகவும் பயணிக்கிறது.
