தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம் சமந்தாவின் வெற்றிகரமான மீள்வருகை படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
ஸ்வர்ணா (சமந்தா), டாக்டர் ஹனியை (திகந்த்) காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். பல நாட்கள் கழித்து, ஹனியின் தங்கை திருமணத்திற்காக அவரது சொந்த கிராமத்திற்கு இருவரும் வருகிறார்கள். அங்கு ஸ்வர்ணாவைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். யாரும் அவளை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள். ஒருவழியாக, ஸ்வர்ணா மெதுவாக அவர்கள் மனதைக் கவர்ந்து, மாமனார், மாமியாரையும் கவர்ந்துவிடுகிறார். இந்த நேரத்தில், கருணா (குல்ஷன் தேவய்யா) என்பவனின் ஆள், அவளைப் பின்தொடர்கிறான். ஸ்வர்ணா, ஜான்சி என்பவரைப் போலவே இருப்பதால் அவளைக் கொல்லச் சொல்கிறான் கருணா. ஆனால், ஸ்வர்ணா அந்த ஆளைக் கொன்றுவிடுகிறார். இதனால், சிறையிலிருக்கும் கருணா நேரடியாகக் களமிறங்குகிறான். ஸ்வர்ணாவின் கடந்த காலம் என்ன? ஜான்சி யார்? தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஸ்வர்ணா என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

பூ போல் அமைதியாக அறிமுகமாகும் சமந்தா, தன்னையும், தன் கணவர் குடும்பத்தையும் தாக்க வருபவர்களை எதிர்த்து நிற்கும் காட்சிகளில் புயலாக மாறி ஆக்ஷனில் அசத்துகிறார். தன் அழகான சிரிப்பு மற்றும் குறும்புத்தனமான நடிப்பு ஆகியவற்றை கடந்து ஆண்மைத்தனம் மிக்க நடை மற்றும் உடல்மொழி மூலம் மிரட்டுகிறார். குறிப்பாக, ஆக்ஷன் மற்றும் துப்பாக்கி சூடு காட்சிகளை பார்வையாளர்கள் வியக்கும் விதத்தில் கையாண்டிருக்கும் சமந்தா, புடவை கட்டிய பூலான்தேவியாக வலம் வந்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி, கணவரின் தங்கையாக நடித்திருக்கும் நடிக என அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா, பெரிய அளவில் மிரட்டவில்லை என்றாலும், சமந்தா யார் ? என்ற உண்மையை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து திரைக்கதை பயணத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. சமந்தாவின் கோபமான முகத்தையும், மாஸான நடிப்பையும் சரியான அளவில் பார்வையாளர்களிடம் கடத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.சந்தோஷ் நாராயணனின் சையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை கொடுக்கிறது. பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் வெளியான சாதாரண ஆக்ஷன் கமர்ஷியல் மாஸ் கதை தான் என்றாலும், அதை குடும்பத்துடன் பார்க்கும்படியான மற்றும் பெண்களுக்கு பிடிக்கும் வகையிலான ஒரு கதையாக கதையாசிரியர்கள் ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டி கொடுத்திருக்கிறார்கள். இவர்களது கதைக்கு திரைக்கதை அமைத்திருக்கும் ராஜ் நிடிமொரு, பரபரப்பான காட்சிகள் மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
சமந்தா ஏற்கனவே பல படங்களில் ஆக்ஷனில் மிரட்டியிருந்தாலும், இதில் அவரை வேறு ஒரு பரிணாமத்தில் ஆக்ஷன் நாயகியாக கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.
சிறந்த மருமகளாக வேண்டும் என்பதற்காக சமந்தா செய்யும் குறும்புத்தனமான மோசடிகள் மற்றும் மருமகள்களுக்கு இடையே நிலவும் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி, இரண்டாம் பாதியில் கலகலப்பை கலரவமாக மாற்றினாலும், அங்கேயும் குடும்பத்தாரை இணைத்து ஒரு முழுமையான குடும்ப ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக கொடுத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்தி விடுகிறார்.
