ராகவ்,யாமினி லட்சுமணன், பிரேர்னா கண்ணா, ஐடிஐ. ஆச்சார்யா, அருண் மோகன், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, நிதிஷ், பாலாஜி, ராஜவேல், அதுல், ஜி. சிவகுமார்,வெங்கட் ரமேஷ், கல் ஆர் .கணேசன், எல் . சண்முகசுந்தர் நடித்துள்ளனர். எல்.சண்முக சுந்தர் இயக்கியுள்ளார்.பிரதீப் பத்ம குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் விகாரி இசையமைத்துள்ளார். அபிஷேக் மற்றும் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளனர்.
ராகவ் ரங்கநாதன் மிகுந்த புத்திசாலி. அவர் எதையும் உற்றுநோக்கி உள்ளார்ந்து கவனிக்கும் பழக்கம் கொண்டவர்.ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலே கூட அதன் பின்னணி பற்றிக் கூறி விடுபவர்.அதை நண்பர்கள் அதை தெய்வ சக்தி என்றாலும் அவர் அறிவியல் சார்ந்தது என்று நம்புகிறார்.ராகவ் நடிகை ஒருவரது தீவிர ரசிகராக இருக்கிறார்.அவரைச் சந்திக்கும் முயற்சியில் இருக்கிறார்.
அப்போது அவருக்குப் பாலியல் தொழிலாளி யாமினியின் நட்பு கிடைத்து சற்று நெருக்கமாகப் பழகி வருகிறார்.இப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் யாமினி இறந்து விடுகிறார் .அதுவும் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறக்கிறார்.அந்த மரணம் கொலைதான் என்றாலும் நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிறது.போலீஸ் ஆர்வம் காட்டாமல் மந்தகதியில் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.தனது அறிவைப் பயன்படுத்தி ராகவ் அதை நிரூபிக்க முயல்கிறார்.ஆனால் அதில் வெற்றி பெற முடியாமல் திணறுகிறார்.ஒரு கட்டத்தில் காவல்துறை தீவிரமாக இதில் இறங்குகிறது.காவல்துறையே வியக்கும் வண்ணம் இன்னொரு பக்கம் ராகவ் இதில் தீவிரமாகப் போராடுகிறார்.ஒரே சமயத்தில் இரண்டு தரப்பும் போட்டி போட்டுக் கொண்டு துப்பு துலக்குகிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றார்கள்? கடமைக்குச் செய்பவர்களா ? கடமையே கண்ணாகச் செய்பவர்களா ? யார் வெற்றி பெற்றார்கள்? கொலையாளி யார் ? என்பதுதான் 135.22 நிமிடங்கள் கொண்ட ‘பீப்’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவ், அதீத புத்திசாலி மற்றும் நம்ப முடியாத அறிவியல் சக்திப் படைத்த மனிதர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காவல்துறையையே மிஞ்சும் அளவுக்கு புலன்விசாரணை மேற்கொள்ளும் ராகவ், பல இடங்களில் கொஞ்சம் அதிகமாக பேசினாலும், தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்.
பாலியல் தொழிலாளி சுனைனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாமினி லக்ஷ்மணன், அரை பாவாடை, குட்டை டவுசர் என்று அறைகுறை ஆடைகளில் மட்டும் இன்றி புடவையிலும் கவர்ச்சி காட்டி பார்வையாளர்களை கிரங்கடித்து விடுகிறார். நடிப்பிலும் எந்தவித குறையும் இன்றி பயணித்திருக்கிறார்.
பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல்.சண்முக சுந்தரம், ”இந்த பூனையும் பால் குடிக்குமா ?” என்பதற்கு ஏற்ப அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் விசயங்கள் அனைத்தும், “அடப்பாவி…” என்று சொல்ல வைக்கிறது. கதாபாத்திரற்கு ஏற்ப தனது முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, அவரது கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது.
நடிகை நயனா கபூராக நடித்திருக்கும் ஐடி ஆச்சார்யா, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நித்திஷ், சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி, படத்தொகுப்பாளர்கள் அபிஷேக் மற்றும் விக்னேஷ்.ஆர்.எல், கலை இயக்குநர் உமேஷ் குமார், சண்டைப்பயிற்சி இயக்குநர் ராம் குமார் ஆகியோர் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் பயணித்திருந்தாலும், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணிக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் படத்தில் திறம்பட கையாண்டிருக்கிறார்கள்.
நம்ப முடியாத ஒரு விசயத்தை அறிவியல் பூர்வமாக சொல்லி, இப்படியும் நடக்கலாம்..!, என்று நாயகனின் சக்தியை விளக்கியிருக்கும் இயக்குநர் எல்.சண்முக சுந்தரம், அதனுடன் கிரைம் திரில்லர் சப்ஜக்ட்டை இணைத்து சொல்லிய விதம் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறது.
அறிவியல் சார்ந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான கதை என்றாலும், கிளுகிளுப்பான காட்சிகளை அதிகமாக பயன்படுத்தி முதல் பாதி படம் முழுவதும் பார்வையாளர்கள் மனதிப் பீப்…சத்தத்தை ஒலிக்கச் செய்திருக்கும் இயக்குநர் எல்.சண்முக சுந்தரம், இரண்டாம் பாதியில் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?, என்ற எதிர்பார்ப்புடன் நகர்த்தி சென்று, இது வெறும் பீப் காட்சி படம் மட்டும் அல்ல, என்பதை நிரூபித்திருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலும், நாயகனின் அதீத பேச்சு பார்வையாளர்களை சற்று சோர்வடைய செய்கிறது. இருந்தாலும், குற்றவாளிய யார் ? என்பது தெரிந்த பிறகும், ஆதாரத்துடன் அவரை எப்படி நெருங்கப் போகிறார்கள், அவருக்கு எத்தகைய தண்டனை பெற்றுத்தர போகிறார்கள், என்ற ரீதியில் நகரும் படம், பார்வையாளர்களை சோர்வில் இருந்து மீட்டெடுத்து விடுகிறது.
