நாயகன் அர்ஜுன் தாஸ் வாழ்ந்து வரும் கிராமம், இரண்டாக பிரிந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக இரு கிராமத்தினரும் அடிதடி, வெட்டுக்குத்து என விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இரண்டு கிராமத்தையும் ஒன்று சேர்க்க அர்ஜுன் தாசும், காளி வெங்கட்டும் முயற்சி செய்கிறார்கள். ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்து போகிறார். ஆனால், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட்டுக்கு உயிர் இருப்பதாக நம்புகிறார். மேலும், அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது. காளி வெங்கட்டின் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி குறியாடி சொல்கிறார். அதன்பின் இரண்டு ஊர்மக்களும் காளி வெங்கட் உடலை ஊருக்கு நடுவே வைத்து தெய்வமாகவே வழிபடுகிறார்கள். இறுதியில் காளி வெங்கட் உடலுக்கு என்ன ஆனது? ஊர் மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

காட்சிகளில் ஹீரோயின் இல்லை என்றாலும், கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அர்ஜூண் தாஸை பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக கச்சிதமாக பொருந்திருப்பவர் தனது அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். சில நிமிடங்கள் மட்டுமே இயல்பான கதாபாத்திரமாக வலம் வரும் காளி வெங்கட், பிறகு படம் முழுவதும் பிணமாக நடித்திருந்தாலும், அதை மிக பொறுமையாகவும், பொறுப்புணர்வோடும் கையாண்டு கவனம் ஈர்த்து விடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் சிவாத்மிகா, சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், நாசர், ராட்சசன் சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பி.எம் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகியலோடு படமாக்கப்பட்டிருக்கிறது. டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விஷால் வெங்கட், சாதியால் பிரிந்து கிடக்கும் ஊரை ஒன்று சேர்க்க போராடும் ஒருவரது வாயு எப்படி ஒன்று சேர்க்கிறது, என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறது. திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், பலம் வாய்ந்த வசனங்கள் அந்த குறையை மறைத்து பார்வையாளர்களை கைதட்ட வைப்பதோடு, மூட நம்பிக்கை மற்றும் மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு சாட்டையடியாகவும், சாதி பிரிவினையில் மூழ்கியிருப்பவர்களை சிந்திக்க வைக்கிறது.
