
பிரித்விராஜ் தனது குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அங்கு பெண்ணிடம் அத்துமீறும் மானேஜரை கண்டித்ததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். சம்பளமும் தடைபடுகிறது. சோகத்தில் மது குடிக்கும் பிரித்விராஜ், தனது பழைய காதலி வீட்டுக்கு சென்று பிரச்சினையில் சிக்குகிறார். போலீசாரிடம் பிடிபடுகிறார். போலீஸ் நிலையத்தில் ஒரு குழந்தை காணாமல் போன புகாரில் போலீசார் பிசியாக இருக்கும்போது, இன்ஸ்பெக்டரின் சீருடை மற்றும் வாக்கிடாக்கியை எடுத்துக்கொண்டு ‘எஸ்கேப்’ ஆகிறார், பிரித்விராஜ். பிரித்விராஜிடம் இருந்து சீருடை மற்றும் வாக்கிடாக்கியை போலீசார் கைப்பற்றினார்களா? காணாமல் போன குழந்தையை மீட்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களை மது போதை எப்படி ஆட்கொள்கிறது, அதனால் அவர்கள் தன்னைத்தானே எப்படி எல்லாம் இழிவுப்படுத்திக் கொள்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதையை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம். மது போதையின் ஒவ்வொரு கட்டத்தையும் தனது எதார்த்தமான நடிப்பில் கச்சிதமாக வெளிக்காட்டியிருக்கும் பிரித்திவிராஜ் ராமலிங்கம், உடல் மொழி மற்று வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் தனது மன உளைச்சலை போதை மூலமாக வெளிப்படுத்துவதில் அபாரமாக நடித்திருக்கிறார். அதே சமயம், எந்த இடத்திலும் ஓவராக நடிக்காமல், தனது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.
நாயகனின் கல்லூரி தோழியாக நடித்திருக்கும் மைனா நந்தினி ஒரு சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் அசத்துகிறார். எதிர்பார்க்காத அதிர்ச்சி மற்றும் ஏக்கத்தை தனது முகத்தில் காட்டி அந்த ஒரு காட்சியிலேயே ஒட்டு மொத்த திரையரங்கையும் சிரிக்க வைத்துவிடுகிறார். மைனா நந்தினியின் கணவராக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ் வரும் காட்சிகளும் அறுமை.
ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் காளி வெங்கட், தையல்காரராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்பவராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அறிவுரை சொல்பவராக நடித்திருக்கும் போஸ் வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விஜய் முருகன் ஆகியோர் நாயகனின் பயணத்தில் கவனம் ஈர்க்கும் மனிதர்களாக கடந்து போகிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் எளிமை என்றாலும், திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும் கூடுதல் வலிமையை கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் என இரண்டு பணிகளை செய்திருக்கும் மதன் குணதேவ், கதை முழுவதும் இரவு நேரத்தில் நடந்தாலும், அந்த உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் விளக்குகளை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். காட்சிகள் பெரும்பாலும் சாலைகளில் நடந்தாலும், அங்கேயும் விளக்குகளின் வெளிச்சத்தில் வேறுபாட்டை காண்பித்து கண்களை உறுத்தாத வகையில் காட்சிகளை கையாண்டிருக்கிறார். மதுபிரியர்களின் அதீத போதையினால் சில சமயங்களில் ஏற்படும் ஐயயோ….,சம்பவங்களை மையமாக கொண்டு பிரித்திவிராஜ் ராமலிங்கம் எழுதியிருக்கும் கதை கருவுக்கு, பூர்ணா ஜெஸ் மைக்கேலின் திரைக்கதை மற்றும் வசனம் மது பிரியர்களுக்கான அறிவுரையாக அல்லாமல், அவர்களின் உளவியல் பிரச்சனைகளை பேசக்கூடியதாக அமைந்திருக்கிறது. அதே சமயம், மன அழுத்தத்திற்கு மது தீர்வு அல்ல, அது மேலும் மேலும் மன அழுத்தத்தை தான் கொடுக்கும் என்பதையும் பிரச்சாரமாக சொல்லாமல் போகிற போக்கில் சொல்லிவிட்டு, இறுதியில் திருந்துங்கப்பா…,என்று லேசாக புத்திமதியும் சொல்கிறது.
கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மற்றும் கூடுதல் வசனத்தை விட, அவர் நடித்திருக்கும் சாமியார் கதாபாத்திரமும், சரக்கு கிளாஸை கசக்கி பத்திரப்படுத்தும் விதமும் அதீத கவனம் ஈர்க்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்பவர்களையும், அவர்களின் செயல்களையும், இழிவாகப் பார்க்கும் மனிதர்களுக்கு, அவர்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும், அதனால் அவர்கள் எத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் உணர வைக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் என்.அரவிந்தன், எதையும் மிகைப்படுத்தி சொல்லாமல் அனைத்தையும் அளவாக சொல்லி படத்தை ரசிக்க வைப்பதோடு, பார்வையாளர்களை யோசிக்கவும் வைத்திருக்கிறார். இரவு 10 மணிக்கு மேக் சரக்கு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், போராட்டத்திற்கு நடுவே பயணப்படும் நாயகன் போகும் இடம் எல்லாம் அவருக்கு சரக்கு கிடைப்பது தான் சற்று செயற்கைத்தனமாக இருக்கிறது. மற்றபடி படத்தில் குறை என்று எதுவும் இல்லை, நாயகனின் போதை போல் படம் பார்வையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்தும்.