
பிறப்பதற்கு முன்பே தந்தையையும், வளரும் வயதில் தாயையும் இழந்த ரங்கராஜ், கஷ்டப்பட்டு படித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார். நேர்மையான அதிகாரியாக ஜொலிக்கிறார். அழகான மனைவி, அன்பான மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அவரது மனைவி நான்சி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவியின் மரணத்துக்கு பிறகு குடிக்கு அடிமையாகி தன்னைத்தானே அழித்துக்கொண்டு வரும் ரங்கராஜுக்கு தனது மனைவியை கொலை செய்தது யார்? என்ற உண்மை தெரியவருகிறது. கொலையாளியை தேடி பாய்ச்சலுடன் செல்கிறார். ரங்கராஜின் மனைவியை கொலை செய்தது யார்? கொலைக்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கதாபாத்திரங்களில், அப்பா மற்றும் மகன் என முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரங்கராஜ், காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் தனது மொத்த வித்தைகளையும் இறக்கியிருக்கிறார். ‘காக்க காக்க’ சூர்யா போல் காதல் காட்சிகளில் கலக்கியிருப்பவர், மனைவியின் சடலம் முன்பு ‘வேடையாடு விளையாடு’ கமல் போல் கதறி அழுகிறார். அப்பா கதாபாத்திரத்தில் பெரிய மீசையோடும், அருவாளோடும் வலம் வந்து சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டுபவர், கல்லுக்கடையில் குத்தாட்டம் என்று ‘பருத்திவீரன்’ கார்த்தியை நினைவுப்படுத்துகிறார். ஒட்டு மொத்தமாக படம் முழுவதுமே தனது நடிப்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனுஷன் நடித்து தள்ளியிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸியின் நடிப்பிலும் குறையில்லை.
மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் வயது முதிர்வும், அவர் முடியாமல் நடித்ததும் தெரிகிறது.
குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அரந்தாங்கி நிஷா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மனோஜ் கதைக்களத்திற்கு ஏற்றவாறும், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும் பணியாற்றியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று இரண்டு கதைகள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் படத்தொகுப்பாளர் ரஞ்சித் தொகுத்திருந்தாலும், திரைக்கதையை சற்று வேகமாக பயணிக்க வைத்திருக்கலாம்.
நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். சினிமாவின் பல்வேறு காலக்கட்டங்களில் நாம் பார்த்த வழக்கமான பழிவாங்கும் கமர்ஷியல் ஆக்ஷன் படம் தான் என்றாலும், சில மாற்றங்களோடும், பல திருப்பங்களோடும் விறுவிறுப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். முதல் படத்திலேயே இயக்குநர், நாயகன் என்று இரட்டை குதிரை சவாரி செய்திருக்கும் ரங்கராஜ், ஒரு நடிகராக தனது திறமையை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்து, பல கெட்டப்புகளில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். நடிகராக மெனக்கெட்டது போல் திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இயக்குநராகவும் ஸ்கோர் செய்திருப்பார்.