
நானி ஒரு கருணை இல்லாத போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் படத்தின் தொடக்கத்தில் சில நபர்களை கொடூரமாக கொலை செய்து அதனை வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புகிறார். அதற்கு பின் தான் செய்த கொலை வழக்கை அவரே விசாரிக்கிறார். இப்படி பல ஊரில் பலர் இது மாதிரி கொலைகளை செய்து அதனை வீடியோ எடுத்து ஒரு வலைத்தளத்தில் பதிவு செய்கின்றனர். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்? இதற்கு பின்னணி என்ன? நானி கொலை செய்வதற்கு காரணங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
காக்கி சாட்டை போடாத காவல்துறை அதிகாரியாக வலம் வந்தாலும், காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் நானி, தனது ஒவ்வொரு அசைவுகள் மூலம் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். சண்டைக்காட்சிகளில் வன்முறை தாண்டவம் ஆடினாலும், தனது தனித்துவமான நடிப்பு மற்றும் வித்தியாசமான மேனரிஷம் மூலம் பார்வையாளர்களை நானி ரசிக்க வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் படத்தில் அதிகமாக இருந்தாலும், அதை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் நீளமாகவும், வன்முறை நிறைந்தவையாகவும் இருந்தாலும், அதை வெவ்வேறு கோணங்களில் காட்டி, காட்சிகளை நேர்த்தியாக கோர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ், படம் முழுவதையும் தொய்வில்லாமல் வேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் சைலேஷ் கோலானு, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, கமர்ஷியல் மாஸ் ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கிறார். படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் பார்வையாளர்களை பயணிக்க வைத்து விடுவதோடு, அடுத்தது என்ன ? என்ற கேள்வியை படம் முழுவதும் பயணிக்க வைத்து பார்வையாளர்களை இருக்கையில் கட்டுப்போட்டு விடுகிறார்.
விசாகப்பட்டினத்தில் தொடங்கும் கதை, காஷ்மீர், பீஹார், ராஜஸ்தான் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் என பல மாநிலங்களுக்கு பயணப்பட்டாலும், எந்த இடத்திலும் துளி அளவும் தொய்வில்லாமல் ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது.
படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருந்தாலும், அவற்றை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் சைலேஷ் கோலானு, அர்ஜுன் சர்க்காரின் அதிரடி பயணத்தை மாஸாகவும், திரில்லிங்காகவும் சொல்லி ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.