
ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார். அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்ல தயாராகிறார். அந்த தீவில் உள்ளவர்களை வைத்து நடைபெறும் கடத்தல் தொழிலை எப்படி ஒழிக்கிறார், தன் அண்ணனை கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் சாராம்சம்.
கோபக்கார காவலர், முரட்டுத்தனமான கைதி, அதிரடி காட்டும் கடத்தல்காரன், ஒரு இனத்தை காக்கும் தலைவன் என பல பரிணாமங்களில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு பரிணாமங்களிலும் நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி செண்டிமெண்ட் காட்சிகளிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தியிருக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் வேடத்தில் நடித்திருக்கும் சத்யதேவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு மிக்கதாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் ஹீரோவுக்கான முக்கியத்துவத்தில் மூழ்கி காணாமல் போய்விடுகிறது. இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்ட பணியை குறையின்றி செய்திருக்கும் சத்யதேவ் பார்வையாளர்கள் மனதில் சிவாவாக நின்றுவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு வசீகரமான முகம். ஆனால், அவரது காதல் காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சியில் இருந்த முத்தக் காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது. அதனால், படத்தில் அவருக்கான வேலை பெரிதாக இல்லை. ஒருவேளை இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ், தேசிய பாதுகாப்பு துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மனிஷ் சவுத்ரி, பழங்குடி இன மக்களின் குருவாக நடித்திருக்கும் ஐயப்பா பி.சர்மா, இலங்கை மாஃபியாவாக நடித்திருக்கும் பாபுராஜ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் கிரிஸ் கங்காதரன் மற்றும் ஜோமன் டி.ஜான் ஆகியோர் படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. இலங்கை ராணுவத்துடானான சேசிங் உள்ளிட்ட படத்தின் அனைத்து ஆக்ஷன் காட்சிகளையும் தங்களது கேமரா மூலம் பிரமிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், குறிப்பாக பின்னணி இசையும், மாஸ் காட்சிகளின் பீஜியமும் காட்சிகளுடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்கிறது. சாதாரண காட்சிகள் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் பின்னணி இசையமைத்திருக்கும் அனிருத், இசை இல்லை என்றால் படமே இல்லை என்று சொன்னாலும் மிகையாகாது. படத்தில் எதை செல்லாம் ரகசியமாக சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் படத்தின் ஆரம்பத்திலேயே விளக்கமாக சொல்லும் வகையில் படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் நவீன் நூலி, அண்ணனை நாயகன் காப்பாற்றுவாரா ? இல்லையா ? என்ற முக்கிய காட்சியை கூட எவ்வித விறுவிறுப்பும் இன்றி தொகுத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.
அண்ணனை தேடும் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் என்ற எளிமையாக தொடங்கும் கதையை, பெரும் குற்ற பின்னணி கொண்ட கும்பலின் சதி திட்டங்களை முறியடிக்கும் உளவாளி, இலங்கையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பழங்குடி இன மக்கள், அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கூட்டம், என்று திரைக்கதையின் விரிவாக்கத்தை மிக பிரமாண்டமாக எழுதியிருக்கும் இயக்குநர் கௌதம் தின்னனுரி, பிரமிக்க வைக்கும் களங்கள் மற்றும் காட்சிகளோடு படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் கௌதம் தின்னனுரி, இலங்கை மாஃபியா கூட்டம் மற்றும் ஹீரோவின் உளவு வேலை ஆகியவற்றை எதிர்பார்ப்புடனும், சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நகர்த்தி செல்கிறார். இதே விறுவிறுப்பும், பரபரப்பும் இரண்டாம் பாதியில் காணாமல் போவது சற்று ஏமாற்றமாக இருந்தாலும், முடிவில் வேறு ஒரு பாதையில் கதையை பயணிக்க வைத்து, முடிவில்லை தொடக்கம் என்று சொல்லி பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.