
மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் ஜிம் சர்ப், பல ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கான்ட்ராக்டை சூழ்ச்சி செய்து பிடிக்கிறார். இதற்காக அரசியல்வாதிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முடிவு செய்கிறார். இதற்காக முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவை வைத்து பணத்தை மாற்ற முடிவு செய்கிறார் ஜிம் சர்ப். நாகார்ஜுனா, தனுஷ் உட்பட நான்கு பிச்சை காரர்களை பினாமி மாதிரி வைத்து பணத்தை மாற்ற முடிவு செய்கிறார். அதன்படி மூன்று பிச்சை காரர்களை வைத்து பணத்தை மாற்றி அவர்களை கொலை செய்து விடுகிறார்கள். தனுஷ் பேரில் இருக்கும் பணத்தை மட்டும் மாற்ற முடியாமல் போகிறது. மேலும் தனுஷ் தன்னை கொன்றுவார்கள் என்று நினைத்து தப்பித்து ஓடிவிடுகிறார். இறுதியில் நாகார்ஜுனா, தனுஷை கண்டுபிடித்து பணத்தை மாற்றினாரா? தனுஷ் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், கதாநாயகன் என்ற பிம்பதை தாண்டி, தேவா என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். மாஸ் ஹீரோ என்றாலும் எப்படிபட்ட கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் தனுஷ், மாபெரும் நடிகர் என்பதற்கு அறிமுக காட்சியே சாட்சி. பிச்சைக்காரர் கதாபாத்திரத்தை தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் தனுஷ், கோடீஸ்வர் ஆனதும் ஆளே மாறிவிடுகிறார். முழு படத்தை தன் தோள் மீது தூக்கி சுமந்திருக்கும் தனுஷின் ஒவ்வொரு அசைவுகளும் படத்தை ரசிக்க வைக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா ஆட்டம் மற்றும் அழகை தவிர்த்துவிட்டு நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். சிபிஐ அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் நாகர்ஜுனா அலட்டல் இல்லாமல் நடித்தாலும், காட்சிக்கு காட்சி ஆச்சரியப்படுத்துகிறார். ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கும் ஜிம் சர்ப், மிரட்டுகிறார். அவரது தோற்றம் மற்றும் நடிப்பு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவது பார்வையாளர்களின் கனவத்தை தன் பக்கம் ஈர்த்துவிடுகிறார். சுனைனா, ஜெயப்பிரகாஷ், சாயாஜி ஷிண்டே, பாக்யராஜ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை மூன்று மணி நேரம் திரைப்படத்தை அலுப்பு தெரியாமல் பார்க்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டியின் கேமரா திரைப்படங்களில் பார்த்திராத லொக்கேஷன்கள் மூலம் கண்களுக்கு விருந்துபடைத்திருக்கிறது. காட்சிகள் மட்டும் இன்றி கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பதிலும் அதிக பங்காற்றியிருக்கிறார். படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ், படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சேகர் கம்முல்லா, தொழிலதிபர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் இடையே நடக்கும் பேரத்தின் பின்னணியை அதிர்ச்சியளிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். அரசு திட்டம் தனியார் வசம் செல்வது, பணம் கைமாறுவது, பிணாமிகளும் அவர்களின் பலியும், என்று படம் தொடங்கியதில் இருந்து முடியும் அவரை பல ஆச்சரியமான விசயங்கள் மூலம் படம் வியப்பை தருகிறது. தனுஷ், நாகர்ஜுனா, ஜிம் சர்ப் ஆகியோரை சுற்றி பயணிக்கும் கதையை மிக சுவாராஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் சேகர் கம்முல்லா, திரைப்படங்களில் சொல்லப்படாத பல விசயங்களை மிக விரிவாக சொல்லியிருக்கிறார். படத்தின் நீளம் மட்டுமே சிறு குறையாக தெரிந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களும், அதன் பின்னணிகளும் குறையை மறக்கடித்து படத்தை கொண்டாட வைக்கிறது.