எழுத்தாளரான சத்யராஜ் சாமான்ய மக்களின் உணர்வுகளை கதையாக எழுதுவதற்காக காளி வெங்கட் வாழ்க்கையை தேர்வு செய்கிறார். இதையடுத்து அவரது பின்னணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய தொடங்குகிறார் சத்யராஜ். ஆட்டோ டிரைவரான காளி வெங்கட், மனைவி ஷெலி, மகள் ரோஷினி, மகன் விஷ்வாவுடன் வாழ்ந்து வருகிறார். சராசரி வருமானத்தோடு குடும்பத்தை நடத்தி வரும் காளி வெங்கட் தனது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக சில முயற்சிகளை எடுக்கிறார். இறுதியில் அவரது முயற்சி பலித்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் காளி வெங்கட் தனது இயல்பான நடிப்பு மூலம் கண்ணன் என்ற கதாபாத்திரமாக மக்கள் மனதில் எளிதில் ஒட்டிக்கொள்கிறார். கதையாசிரியர் ஜோதி ராமையா கதாபாத்திரத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முழுப்படத்தையும் நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜின் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. காளி வெங்கட்டின் மகளாக நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன், அப்பாவை விட்டுக் கொடுக்காத மகளாக அளவாக நடித்திருக்கிறார். காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அழுகாச்சி அம்மாவாக நடித்து வந்த கீதா கைலாசம் முதல் முறையாக சிரித்த முகத்தோடு, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் கலகலப்பாகவும், கம்பீரமாகவும் நடித்திருக்கிறார். காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் கிஷோர், ஐடி நிறுவன அதிகாரியாக நடித்திருக்கும் அர்ச்சனா, மின்வாரிய அலுவலக அதிகாரியாக நடித்திருக்கும் சுனில் சுகதா, ஊறுகாய் விற்பனையாளராக நடித்திருக்கும் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். எளிமையான மக்களின் எதார்த்த வாழ்க்கையையும், அவர்களது வாழ்விடங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே
இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதை போல் மெதுவாகவும், அமைதியாகவும் பயணித்திருந்தாலும், காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் சமுஷ்கி, பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வகையில் கதையை நகர்த்திச் சென்றாலும், சில இடங்களில் தொய்வு ஏற்படும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார். இருந்தாலும், இயக்குநரின் புதிய வகை கதை சொல்லல் அந்த குறைகளை மறக்கடிக்க செய்கிறது.எழுதி இயக்கியிருக்கும் கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களுக்கு மதிப்பளித்து அவர்களது எளிமையான வாழ்க்கையும் ஒரு சாகசம் தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
திரைக்கதை மெதுவாக நகர்வது படத்தின் குறையாக இருந்தாலும், கதாபாத்திரங்களை கையாண்ட விதம், கதை சொல்லும் முறையில் கடைபிடிக்கப்பட்ட புதிய உத்தி ஆகியவை குறைகளை மறந்து கதையோடும், கதை மாந்தர்களோடும் பார்வையாளர்களை பயணிக்க வைத்துவிடுகிறது.
