கர்நாடகாவில் உள்ள ஒரு போலீஸ்நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கப்படுகிறது. அது டானாக வலம் வரும் நவீன் சந்திராவுடையது என்பதும், அதனை கடத்தும் வேலையை செய்வது குரு சோமசுந்தரம் என்பதும் தெரியவருகிறது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை களையெடுக்க போலீஸ் சூப்பிரண்டு கிச்சா சுதீப் களமிறங்குகிறார். சில பிரச்சினைகளால் சஸ்பெண்டில் இருக்கும் அவர், தனது குழுவினருடன் இந்த வேலையை ரகசியமாக செய்கிறார். இன்னொருபுறம் முதல்-மந்திரி படுத்த படுக்கையாகி போக, அவரை கொன்று முதல்-அமைச்சர் பதவிக்கு வர ஆயத்தமாகிறார் அவரது மகன் சைன் டாம் சாக்கோ. இந்த கொலையை டாக்டர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துவிடுகிறார். இந்த விவகாரம் சைன் டாம் சாக்கோவுக்கு தெரியவர அந்த செல்போனை தேடி டாக்டர் வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போதுதான் அந்த செல்போனுடன் டாக்டர் மகன் கடத்தப்பட்டிருப்பதும், அவரை போலவே 18 சிறுவர்-சிறுமிகள் கடத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டனர்? கொலை வீடியோ அடங்கிய அந்த செல்போன் கிடைத்ததா? போதைப்பொருள் கும்பலை கிச்சா சுதீப் களையெடுத்தாரா? இதற்கெல்லாம் பின்னணி தான் என்ன? என்பதே படத்தின் பரபரப்பான மீதி கதை.
டைநீக்கம் செய்யப்பட்டாலும், காக்கி சட்டை போடாமலேயே போலீஸ் கடமையை செய்யும் சுதீப், தனது அதிரடியான நடிப்பு மூலம் படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். சில நிமிடங்களில் சுமார் 50 பேர்களை அடித்து துவைக்கும் காட்சிகளை நம்பும்படி செய்திருக்கிறார். போதையில் காவல் நிலையத்தில் அறிமுகமாகும் காட்சி முதல், ”சிகரெட் பிடிப்பதை குறைக்க வேண்டும்”, என்று இறுதியில் வசனம் பேசும் காட்சி வரை, தனி ஒருவராக முழு படத்தையும் தன் தோளில் சுமந்து பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி பார்வையாளர்களை நடுங்க வைத்து விடுகிறார். கடும் கோபத்துடன் படம் முழுவதும் வலம் வரும் நவீன் சந்திராவின் வில்லத்தனம் மிரட்டல். மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்கு பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் விதார்த், கதையின் மையப்புள்ளியாக பயணித்து திரைக்கதையின் பரபரப்புக்கு உதவியிருக்கிறார்.யோகி பாபு வரும் இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார். ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் தெரிய வைத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டாலும், பார்வையாளர்களுக்கு அந்த உணர்வே ஏற்படாத வகையில் விளக்குகளை பயன்படுத்தியிருக்கும் சேகர் சந்துருவின் பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் மாஸையும், ஹீரோயிஸத்தையும் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக “அண்ணன் யார் தெரிமா…” என்ற பாடல் நிச்சயம் முனுமுனுக்க வைக்கும். எஸ்.ஆர்.கணேஷ் பாபுவின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்திச் செல்வதோடு, காட்சிகள் வேகமாக நகர்ந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடு படத்தை பார்க்க வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, சாதாரண மையக்கரு என்றாலும், அதற்கான திரைக்கதையை சுவாரஸ்யமாக வடிவமைத்திருப்பதோடு, சுதீப் போன்ற மாஸ் ஹீரோவுக்கான மாஸ் ஆக்ஷன் படமாகவும் இயக்கியிருக்கிறார். போரடிக்காத ஒரு முழுமையான மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்திருந்தாலும், இரண்டாம் பாதி படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிகள் சற்று சோர்வடைய செய்கிறது. இருந்தாலும், குழந்தைகளை உயிருடன் மீட்பதற்கான நேரம் குறைந்துக் கொண்டிருக்கும் காட்சிகள், அந்த சோர்வை மறக்கடித்து படத்துடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்து விடுகிறது. படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் படத்தை பொழுதுபோக்காக நகர்த்திச் செல்லும் இயக்குநர் விஜய் கார்த்திகேயா, சாதாரண கதையாக இருந்தாலும் அதை ஒரு மாஸ் ஹீரோவுக்கான படமாக கொடுக்கும் வித்தையை மிக சரியான முறையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
