
அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கிறார். அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக வருகிறார் யோகி பாபு. லவ்லினின் நிலைமையை புரிந்துக் கொண்ட யோகி பாபு அம்மாவின் முக்கியதுவத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் 4 கதைகளை கூறுகிறார். இந்த நான்கு கதைகளையும் உள்ள ஒரே ஒற்றுமை அம்மா என்ற உறவு மட்டும் தான். நடிகர் நட்டி- யின் அம்மா பாலியல் தொழிலாளியாக இருந்து இறந்தவர். இதனால் அம்மாவின் பாசத்திற்காக ஏங்குகிறார் நட்டி. பின் மும்பையில் பெரிய தாதாவாக உருமாருகிறார். மீனவர் சமூதாயத்தை சேர்ந்தவர் ரியோராஜ். இவரது தாய் ரியோவை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிடலாம் என எண்ணுகிறார். ஆனால் அந்த ஊர் ரவுடியான மைம் கோபி இவரை அடிக்கடி வந்து டார்ச்சர் செய்கிறார். இதனை தாண்டி ரியோராஜ் வாழ்க்கை என்ன ஆனது? பாரதி ராஜா மற்றும் வடிவுக்கரசி இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். வருடங்கள் ஓடுகின்றன இவர்களது இரு மகன்களும் வெளி ஊரில் வேலை செய்து வீட்டிற்கு பணம் அனுப்பி வருகின்றனர். ஒரு நாள் பெற்றோரை இழிவு படுத்தி பேசியதால் மனம் உடைந்து போகிறார்கள் பெற்றோர்கள். பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் படும் கஷ்டத்தை விவரிக்கும் கதையாக அமைந்துள்ளது.
அனாதையான சாண்டி ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறார். இவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். மறுபக்கம் முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து வந்த ஒரு அம்மா இவரது ஆட்டோவில் பயணிக்கிறார். அந்த பயணத்தில் இருவரும் அவர்களது கதைகளை பகிர்ந்துக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் அம்மா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் மனநிலைக்கு வருகிறார். இப்படி அம்மா என்ற உறவின் மகத்துவத்தை மையமாக வைத்து இந்த 4 கதைகளும் அமைந்துள்ளது.
நான்கு கதைகளின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி, ரியோ ராஜ், பாரதிராஜா – வடிவுக்கரசி, சாண்டி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு நேர்த்தி.
இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் ஓகே ரகம் தான். படத்தொகுப்பாளர் தமிழ் அரசன் இயக்குநர் காட்சிப்படுத்திய நான்கு கதைகளையும் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொடுத்திருக்கிறாரே தவிர தனித்துவமாக எதையும் செய்யவில்லை. எழுதி இயக்கியிருக்கும் பிரிட்டோ ஜே.பி, நான்கு கதைகளையும் அம்மா செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை பிழிந்திருபதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும், ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு பிளாஷ்பேக் என்று படம் ஓடிக்கொண்டே இருக்கிறது.