மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் வினோவாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவருக்கு, கோவாவில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தின் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. புதிய இடத்தில் தனது திறமையை நிரூபித்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வினோ பணியைத் தொடங்குகிறார்.
அந்த நேரத்தில், ஃபென்னி என்ற பெண்ணை சந்திக்கிறார். ஃபென்னியின் வாழ்க்கையில் ஏற்கனவே ரிச்சி என்ற காதலன் இருக்கிறார். எதிர்பாராத விபத்தில் சிக்கிய அவர், சுமார் 170 நாட்களாக கோமா நிலையில் இருக்கிறார். ரிச்சி மீண்டும் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில், அந்த நாட்களில் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார் ஃபென்னி. அவர் திரும்பி வந்தால், அந்த நினைவுகளை அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருக்கிறது.
இந்தச் சூழலில் வினோவுக்கும் ஃபென்னிக்கும் இடையே ஏற்படும் அறிமுகம், ஆரம்பத்தில் சிறிய மோதல்களுடன் தொடங்கினாலும், பின்னர் நட்பாக மாறுகிறது. ஃபென்னியின் காதல் வாழ்க்கையை மையமாக வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கும் வினோ, அவருடன் நெருக்கமாக பழகத் தொடங்குகிறார். காலப்போக்கில் அந்த நட்பு காதலாக மாறுகிறது. ஆனால், தனது காதலை வினோ வெளிப்படுத்தும் போது ஃபென்னியால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே ரிச்சி மீது கொண்டிருக்கும் காதலும், வினோவிடம் உருவாகும் புதிய உணர்வுகளும் அவரை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

இதற்கிடையில், கோமாவில் இருந்த ரிச்சி மீண்டும் குணமடைந்து வருகிறார். அதன் பிறகு ஃபென்னியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், காதல் உறவுகளுக்குள் உருவாகும் உணர்ச்சிப் போராட்டங்களுமே படத்தின் மீதிக்கதை.
இளமைக்கே உரிய வேகம், பிடிவாதம், காதலில் ஏற்படும் தடுமாற்றம் என பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண், தன் தந்தை மீதான வெறுப்பையும், தாய் மீதான ஏக்கத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
அறியாத வயதில் ஏற்பட்ட காதல் என்றாலும், அதன் மீதான் நம்பிக்கை, அதை காப்பாற்றுவதற்காக மனதுக்குள் நடத்தும் உணர்வு ரீதியான போராட்டத்தை, கண்களின் மூலமாகவே வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி, சிறப்பான பங்களிப்பை வழங்கி கவனம் ஈர்க்கிறார்.
சித்தி இத்னானியின் காதலராக நடித்திருக்கும் ரினிலின் செயற்கைத்தனமான நடிப்பு, அந்த கதாபாத்திரத்தின் மீதான முக்கியத்துவத்தை குறைத்து விடுவதோடு, அந்த கதாபாத்திரத்தின் பயணமும், முடிவும் எப்படி இருக்கும், என்பதை எளிதில் யூகித்து விட முடிகிறது.
விஜே பார்வதியின் பட பட பேச்சும், துறு துறு செயலும் நகைச்சுவை காட்சிகளுக்கு கைகொடுத்திருப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது. கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்தி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
பழமையும் புதுமையும் கைகோர்த்து நிற்கும் கோவாவின் தனித்துவத்தை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரசன்னா கே.குமார், காதலர்களின் உனர்வுகளை பார்வையாளர்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
சித்து குமாரின் இசையில் மெட்டுக்களும், வரிகளும் இணைந்து காதலுக்கு அழகிய இசை வடிவத்தை கொடுத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் காதல் உணர்வுகளையும், சொல்லப்படாத ஏக்கங்களையும், மனதுக்குள் மறைந்திருக்கும் மகிழ்ச்சியையும் தன் பின்னணி இசை மூலம் திரையில் பயணிக்க வைத்திருக்கிறார்.
காதல் உணர்வுகள் மற்றும் காதலர்களின் மனப் போராட்டங்கள் பற்றி கதை பேசினாலும், திரைக்கதை தொய்வின்றி நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் எம்.சுபராக்.
வார்த்தைகளால் சொல்லாத காதலில் தொடங்கி, மறுமணம் மூலம் மனதில் ஏற்படும் முதிர்ச்சியான மற்றும் ஆழமான காதல், என தனது ஒவ்வொரு படங்களிலும் காதல், அதனால் மனதுக்குள் ஏற்படும் போராட்டங்களை, உணர்வுப்பூர்வமாக பேசும் இயக்குநர் சசி, இதில், ஒரு பெண் மனதில் ஏற்படும் காதல் குழப்பத்தையும், அதனால் ஏற்படும் மனப் போராட்டத்தையும் கவித்துவமாய் பேசியிருக்கிறார்.
காதலுக்கும், காதலருக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்குப் பிடித்தமானவற்றையும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளையும் இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் நிலையை தன் எழுத்து மூலமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சசி, அந்த பெண்ணின் மனம் சட்டென்று மாறுவதற்காக சொன்ன காரணங்களும், அதை காட்சிப்படுத்திய விதமும் திரைக்கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், பெண் கதாபாத்திரத்தை கையாண்ட விதமும், அதன் மூலம் பெண்களின் மனங்களையும், அவர்களது மெளனங்களையும் பிரதிபலித்திருப்பது பாராட்டுக்குரியது.
காதல் என்பது ஒருமுறை வருவது என்பதும், ஒருவர் மனதில் ஒருவருக்குத்தான் இடம் என்பதும் போலியானது, என்பதை காட்சி மொழியிலும், கண்கள் பேசும் மொழியிலும் மிக சிறப்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் சசி, காதல் என்பது மனம் சம்மந்தப்பட்டது, என்பதை திருநம்பி கதாபாத்திரம் மூலம் மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், பாராட்டும்படி சொல்லியிருக்கிறார்.
