படத்தின் நாயகன் அஜயும்- நாயகி தனுஷாவும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணத்திற்கு தயாராகும்போது இருவருக்கும் சண்டை வருகிறது. இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, அதை வீடியோ எடுத்து சிலர் நெட்டில் தட்டிவிட பிறகு என்ன இவர்கள் வைரக் ஆகின்றனர். இருவரும் பிரேக் அப் செய்து விடுகின்றனர், ஆனால், பிரேக் அப்பில் இருந்து அஜய், தனுஷா இருவருமே வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். இருவரும் தங்களின் நினைவுகளை மறக்க சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் என பல விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர், இருவருக்கும் இன்னொரு காதலும் மலர்கிறது. ஆனால், பழைய காதலின் நினைவுகள் அவர்களை எதிலும் ஈடுப்படவிடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் இருவம் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். இறுதியில், அஜயும்- தனுஷாவும் இணைந்தார்களா? அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.
காதல் பிரிவு மற்றும் அதை எதிர்கொள்ளும் தற்போதையை காலக்கட்ட இளைஞர்களின் வாழ்வியலை, கலகலப்பாக சொல்லியிருப்பதோடு, எந்த காலக்கட்டத்திலும் காதல் உணர்வு மாறுவதில்லை, என்பதையும் அழுத்தமாக பதிவு செய்ய இயக்குநர் கணேஷ் சந்திரா முயற்சித்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், துடிப்பு மிக்க நடிப்பால் கவர்கிறார். காதல் பிரிவு வலியை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது, அதில் இருந்து விடுபட வேறு தளங்களில் பயணித்து, அதனால் பாதிப்பு அடைவது, என்று படம் முழுவதும் பல உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பல உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, தன் தந்தை பற்றி காதலியின் தந்தை தரக்குறைவாக பேசும் காட்சி, அப்பாவின் கனவை நிறைவேற்றி அவர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும் காட்சி ஆகியவற்றை சொல்லலாம். அவரது குரலும் கம்பீரமாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும் ஒரு நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா, எளிமையான அழகோடு கவர்கிறார். ஹீரோவுக்கு நிகராக நடிப்பில் அசத்தியிருப்பவர் நடனத்திலும் அசத்துகிறார். அழுத்தமான காட்சிகளில் மிக அசால்டாக நடித்து, யாருப்பா இந்த பொண்ணு ?, என்று வியக்க வைத்திருக்கிறார். பாண்டியராஜன், சுனில், லக்ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையுடன் படத்தொகுப்பு பணியையும் சேர்த்து கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். காதல் உணர்வுகளை கசக்கி பிழிகிற ஒரு கதைக்கு பாடல்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விஜய் ஆண்டனி மறந்துவிட்டு இசையமைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. படத்தொகுப்பாளராக முதல் பாதி படத்தை பலவித குழப்பங்களோடு நகர்த்தி செல்லும் விஜய் ஆண்டனி, இரண்டாம் பாதி படத்தை தெளிவாக சொல்லி பார்வையாளர்களை கதையோடு ஒன்றிவிட செய்து விடுகிறார். புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின் வலியை ஜாலியாக சொன்னாலும், இறுதியில் காதல் வலியின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரக்கூடிய விதத்தில் சொல்லி விடுகிறது. காதல் தோல்வி கொடுக்கும் வலிக்கு மருந்து மற்றொரு வலியா அல்லது காதலா என்பதை, தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய பரிதியின் எழுத்து இருந்தாலும், அதற்கான காட்சிகளில் புதுமை இல்லாதது படத்தை பலவீனமடைய செய்கிறது. ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, காதல் கதையாக அல்லாமல் காதல் பிரிவு கதையை, நவீன இளைஞர்களின் உலகத்தின் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் மேற்கொண்ட வேகம் படத்தை தொய்வின்றி நகர்த்தினாலும், அதர பழசான காட்சிகள் மற்றும் சுவாரஸ்யம் இல்லாத திருப்பங்கள் மூலம் படம் பெரிதாக பாதிக்கவில்லை.
