
சென்னையில் வேலைப் பார்த்து வருகிறார் கதாநாயகனான மெட்ரொ சத்யா. கிராமத்தில் இருந்து வந்த இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் ஆசைப்பட்ட பெண்களை கவரவேண்டும் என்றால தன்னிடம் அதிகமான பணம் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதற்காக நகை திருட்டு தொழில் ஈடுப்படுகிறார். தனியாக செல்லும் நபரிடம், முகமூடி அணிந்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வருகிறார் சத்யா. இந்த திருட்டு பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொண்டு. திருடிய நகைகளை பெரியவர் ஒருவரிடம் வழக்கமாக விற்று வருகிறார் சத்யா ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பெரியவர் இறந்துவிடுவதால், அடுத்ததாக டேனியல் போப்பிடம் நகைகளை விற்க தொடங்குகிறார். ஆனால் இவர்கள் யாரிடமும் சத்யா முகத்தை வெளிக்காட்டாமல் அனைத்தையும் செய்து வருகிறார். இந்நிலையில், காலப்போக்கில் டேனியல் போப் டீமோடு பகைத்துக் கொள்கிறார் சத்யா. அதே சமயம், சத்யா இளம்பெண் ஒருவரிடம் நகை திருடிய போது, அப்பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஒருபக்கம், இறந்த பெண்ணின் அப்பாவான ஜெயபிரகாஷ் திருடனான சத்யாவை தேட, மற்றொரு பக்கம் டேனியல் போப் டீம் சத்யாவை தேட இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சத்யாவுக்கு இந்த வேடம் புதிதல்ல என்பதால் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அப்பாவித்தனமான முகத்தோடும், அளவான பேச்சோடும் பயணித்திருப்பவர், குற்ற செயல்களில் ஈடுபடும் போது படம் பார்ப்பவர்களையும் பதற வைத்துவிடுகிறார். வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் டேனியல் போப், மிரட்டவில்லை என்றாலும் சொதப்பாமல் நடித்திருக்கிறார். சிறையில் கெத்தாக எண்ட்ரிக் கொடுத்து இறுதியில் வெத்தாக முடியும் செண்ட்ராயனின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது. ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், இசையமைப்பாளர் ஜோகன் செவனேஷ், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி ஆகியோரது பணிகள் நேர்த்தி. ’மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணனின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, ‘மெட்ரோ’ படத்தின் சில சம்பவங்களை போலவே இதிலும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருப்பதால் படம் திரையிலும் சரி, பார்வையாளர்களிடமும் சரி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வரும் நபர்களிடம் வழிப்பறி மற்றும் செயின் பறிப்புகளில் ஈடுபடுவது சரி, ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அப்படிப்பட்ட இடங்களில் மட்டுமே நடப்பது போல் காட்டியிருக்கும் இயக்குநர் எஸ்.எம்.பாண்டி, ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் சில காட்சிகளை வைத்துக் கொண்டு அதே பாணியில், ஒரு படத்தை கொடுத்திருக்கிறாரே தவிர புதிதாக வேறு எதையும் சொல்லவில்லை.