
நாக சைதன்யா மீனவராக இருக்கிறார். சாய் பல்லவியும் நாக சைத்தன்யாவும் காதலித்து வருகின்றனர். மீனவ குழுக்கு தண்டேலாக {தலைவனாக} இருக்கிறார் நாக சைதன்யா. இவர்களின் மீனவ குழு குஜராத்திற்கு சென்று காண்டிராக்ட் அடிப்படையில் 9 மாதம் மீன் பிடி தொழிலை செய்து வருகின்றனர். வெறும் 3 மாத காலம் மட்டுமே சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இந்த சூழ்நிலையில் ஊரில் உள்ள மீனவன் ஒருவர் கடலுக்கு சென்ற போது எதிர்ப்பாராத விதமாக இறந்து விடுகிறார். இதனால் நாக சைத்தன்யாவையும் கடலுக்கு போக வேண்டாம் என சாய் பல்லவி கூறுகிறார். ஆனால் சாய் பல்லவியின் சொல்லை கேட்காமல் நாக சைதன்யா கடலுக்கு செல்கிறார். அங்கு ஒரு பெரும் புயலில் மாட்டிக்கொண்ட அவர் தெரியாமல் பாகிஸ்தான் கடல் பகுதிற்குள் சென்று விடுகிறார். இதனால் பாகிஸ்தான் கடற்படை இவர்களை சிறைப்பிடிக்கிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாக சைதன்யா தப்பித்து இந்தியா வந்து சாய் பல்லவியை கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.
முதல் பாதியில் மீன சமூகம், அவர்களின் அன்றாட கஷ்டங்கள், பழக்க வழக்கங்களை காட்டியிருக்கிறார் இயக்குநர் சந்து மொன்டட்டி. ராஜு, சத்யாவின் காதலை அழகாக காட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சனை, ராஜு உள்ளிட்டவர்களுக்கு என்ன ஆகுமோ என டென்ஷனாக வைத்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் மைனஸ் இல்லாமல் இல்லை. இருந்தாலும் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ராஜு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நாக சைதன்யா. தன் கெரியரின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், எமோஷன், ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். சாய் பல்லவி வழக்கம் போன்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாக சைதன்யா, சாய் பல்லவி இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் எதுவும் திணிக்கப்பட்டது போன்று தோன்றவில்லை. ஒளிப்பதிவாளர் ஷாம்தத்தை பாராட்டியே ஆக வேண்டும்.