
கிராமத்தில் விவசாய வேலைகளை செய்து வரும் பிரேம்ஜி (சரவணன்) தனது மனைவியை இழந்த சோகத்தை இருக்கிறார். இந்நிலையில் தனது மகள் திவதர்ஷினி (பூமிகா) படிப்பில் நல்ல விதமாக வரவேண்டும் என்பதற்காக சென்னைக்கு அழைத்து வருகிறார். சென்னையில் ஒரு சிறிய வீடு எடுத்து இருவரும் தங்குகின்றனர். பிரேம்ஜி பிழைப்பிற்காக போஸ்டர் ஒட்டும் வேலை செய்கிறார். இந்நிலையில் ஒருநாள் தனது மகளுக்கு உடம்பு முடியவில்லை என்று மருத்துவரிடம் கூட்டி செல்கிறார். அப்போது தான் தனது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் பிரேம்ஜிக்கு தெரிய வருகிறது. இதனை செய்தது யார் என்று கண்டுபிடித்து அந்த நாய வஞ்சகனை கொலை செய்ய வேண்டும் என்று அப்பாவும் மகளும் திட்டமிடுகின்றனர். இறுதியில் அவர்களது திட்டம் நிறைவேறியதா என்பதே வல்லமை படத்தின் கதை.
பிரேம்ஜி நன்றாக நடித்திருக்கிறாரா? என்று பார்ப்பதை விட, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருப்பதையே பாராட்டலாம். ஏதோ வந்தோம், கையை அசைத்தோம், தாடியை தடவினோம், சில வசனங்கள், பல ரியாக்ஷன்க்ள் என்று இல்லாமல் உணர்வுப்பூர்வமாக நடிக்க கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் மனுஷன் நடிக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சியை தாராளமாக வரவேற்கலாம்.
பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிதீர்ப்பதற்கு எடுத்த முடிவு அதிர்ச்சியளித்தாலும், தன் குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை சொல்லும் போது, பார்வையாளர்களின் இதயம் கனக்கச் செய்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ’வழக்கு எண்’ முத்துராமன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக நடித்திருக்கும் சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக நடித்திருக்கும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக நடித்திருக்கும் விது, பள்ளி உதவி பணியாளராக நடித்திருக்கும் திலீபன் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜி.கே.வி மற்றும் ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி இருவரும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே எளிமையாக பயணித்தாலும், கதை மற்றும் திரைக்கதையில் உள்ள இருக்கத்தையும், உணர்வுகளையும் சிதைக்காமல் நேர்த்தியாக பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சி.கணேஷ் குமார், தன்னால் முடிந்த வரை இயக்குநர் சொல்ல நினைத்ததை சுறுக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயற்சித்து 2 இரண்டு மணி நேரத்திற்கு குறைவாக படத்தின் நீளத்தை குறைத்திருந்தாலும், காட்சிகளின் நீளத்தை இன்னும் கூட குறைத்திருக்கலாமே, என்று எண்ண வைக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும் கருப்பையா முருகன், பெண் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய காலக்கட்டத்தின் அவலத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் பிள்ளைகள் பற்றி செய்திகளாக மட்டுமே கடந்து போகும் இந்த சமூகத்திற்கு, பாதிக்கப்படும் பிள்ளைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவிக்கும் வலியை பார்வையாளர்களிடம் கடத்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
சமூகத்தில் நடக்கும் அவலத்தை, திரை மொழியில் சற்று சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் கருப்பையா முருகனின் கதைக்கரு பலம் வாய்ந்ததாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் பலவீனமாக இருப்பதோடு, இது சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.