
வடசென்னை ராயபுரம் பகுதியில் ராதாரவியும், சரண்ராஜூம் ஆளுக்கு ஒரு பகுதிகளாக பிரித்து தங்களுக்குள் பிரச்சனை எதுவும் இன்றி தண்ணீர்கேன் விற்பனை செய்து வருகிறார்கள். ராதாரவியிடம் துஷ்யந்த் ஜெயப்பிரகாசும், பிரியதர்சனும் பணிபுரிந்து வருகின்றனர். சரண்ராஜிடம் சங்கர்நாக் விஜயன் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கிடையே பிரச்சினைகளும், மோதல்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சரண்ராஜ் மனைவி மர்மமாக கொலை செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளும் மர்மங்களும் தான் படத்தின் மீதிக்கதை.
தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக நடித்திருக்கும் ராதாரவி மற்றும் சரண்ராஜ் அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடிக்கும் வழக்கமான வேலை தான் என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கும்படி வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், லைவ் லொக்கேஷன்களில் கேமராவை சுழல வைத்து காட்சிகளை வேகமாக பயணிக்க் வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கி விதம் வியக்க வைக்கிறது. இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுத்திருக்கிறது. என்.ரமணா கோபிநாத்தின் வசனத்தில் இருக்கும் ஆக்ரோஷமும், பில்டப்பும் திரைக்கதையில் இல்லை.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், தண்ணீர் கேன் தொழிலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பதாக சொல்லிவிட்டு, அதைப்பற்றி எந்த ஒரு தகவலையும் படத்தில் வைக்காமல், தண்ணீர் கேன் போடும் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் காதல், திருமணம், அதைச்சார்ந்து வரும் மோதல் என்று வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் மசாலா படத்தை தான் கொடுத்திருக்கிறார். இரு தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதல், அதில் நடக்கும் சதி, அதை தொடர்ந்து ஏற்படும் உயிர் பலி என்று அனைத்தும் ஏற்கனவே பார்த்தவைகளாகவே இருப்பதால் படம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.