சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார் சோனியா அகர்வால். பல வழக்குகளை விசாரித்து வரும் சோனியா அகர்வால், இறந்த ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தம் கொண்டாடி ஒரு பெண் வருகிறார். அந்த பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுகிறது. இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான விக்ராந்திடம் சோனியா அகர்வால் கொடுக்கிறார். அந்த பெண் யார் என்பதை தேடி செல்கிறார் விக்ராந்த். இந்த தேடுதலில் அந்த பெண் பொய் சொல்லி சொத்தை அபகரிக்க உருவாக்கப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான பெண் யார் என்பதை தேடி செல்கிறார். இறுதியில் சொத்துக்கு சொந்தமான பெண்ணை விக்ராந்த் கண்டுபிடித்தாரா? யார் அந்த பெண்? சொத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இதுவரை சினிமாவில் பார்த்திராத நீதிமன்ற காட்சிகள் என்பதால், சோனியா அகர்வாலின் ஒவ்வொரு அசைவுகளும் உண்மையான நீதிபதியை பிரதிபலிப்பது போல் உள்ளது. கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அலக்கியா, சாதாரண முகமாக இருந்தாலும் பலவித உணர்வுகளை தனது கண்கள் மூலமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். தந்தையை காப்பாற்ற போராடும் அவரது வாழ்க்கை திசை மாறுவது, அதை எதிர்கொள்வது என்று அழுத்தமான கதாபாத்திரத்திற்கு தனது அளவான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விக்ராந்த், சிறப்பு தோற்றம் போல் இருந்தாலும், படம் முழுவதும் பயணித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். தொழிலதிபர், அவரது மகன்கள் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் புதியவர்களாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை தனித்து நிற்கவில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் கேமரா காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறது. நீதிமன்ற காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாடல் காட்சியை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். விறுவிறுப்பாக பயணிக்க வேண்டிய கதை என்றாலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்துவதில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.தினேஷ். எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
நீதிமன்ற காட்சிகள் இதுவரை நாம் பார்த்திராத வகையில் உண்மை தன்மையோடு இருப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். பொய்யான வழக்கின் பின்னணியை கண்டறிய முயற்சிக்கும் நீதிபதி, அந்த வழக்கின் விசாரணையில் மற்றொரு மோசடி வழக்கு என்று திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், தொழிலதிபர் இளம் பெண்ணுக்கு சொத்தை எழுதி வைத்தது ஏன்? என்பதற்கான காரணம் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப அமைந்திருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், நீதிமன்ற காட்சிகள், ஒரு வழக்கை நீதிபதி கையாளும் விதம் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது.
