அம்மாவை இழந்த மன வேதனையோடு, தந்தையிடம் மனமுடைந்து வாழும் ஒரு இளைஞன் தான் அபிஷன் ஜீவிந்த். அவனது வாழ்க்கை சரியான பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில், அக்கா (ஆர்.ஜே. ஆனந்தி) அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள். மேட்ரிமோனி வழியாக ஒரு பெண்ணை தேர்வு செய்து, அவளை சந்திக்க அனுப்புகிறாள். அந்த சந்திப்பில்தான் எதிர்பாராத திருப்பம். அவன் பார்க்க வந்த பெண் (அனஸ்வரா ராஜன்) அவனுடைய பள்ளிக் கால தோழி என்பதைக் கொஞ்ச நேரத்தில் இருவருமே உணர்கிறார்கள். இங்கேயிருந்து படம் கடந்த காலத்துக்குள் மெதுவாக பயணிக்கிறது. பள்ளி நாட்களில் அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் (காவ்யா அனில்) காதல். அதே நேரத்தில், அந்தப் பெண்ணுக்கும் இன்னொரு இளைஞனுடன் (சச்சின் நாச்சியப்பன்) காதல் இருக்கிறது. பழைய நினைவுகளைப் பகிரும் போது, “நம்ம பழைய காதல்களை இப்போ நேரில் பார்த்தால் என்ன ஆகும்?” என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்விதான் கதையை திருச்சிக்குத் தூக்கிச் செல்கிறது. பள்ளி, பழைய நண்பர்கள், மறைந்துபோன முகங்கள் அனைத்தையும் தேடி பயணிக்கிறார்கள். அப்போது என்னென்ன எதிர்பாரா சம்பவங்கள் நடந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ள படம் தான் வித் லவ்.
பள்ளிப் பருவக் காதல் என்பது எதிர்பார்ப்புகள் இல்லாத, தூய்மையான மற்றும் முதல் வலி நிறைந்த நினைவாகும். இந்த பருவம் காதல், நட்பு மற்றும் சிறு சிறு உணர்ச்சிப் போராட்டங்களை உள்ளடக்கிய மறக்க முடியாத ஒரு காலகட்டம் என்பதை இயக்குநர் மதன் அழகியலோடு சொல்லி அசத்தியிருக்கிறார். பார்த்த உடனே பிடிக்கவில்லை என்றாலும், பார்க்க பார்க்க பிடித்துப் போவதோடு, பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் அம்சங்கள் நிறைந்த நாயகனாக வலம் வரும் அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம் மற்றும் இளமை பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும் கச்சிதமாக பொறுந்துவதோடு, நடிப்பின் மூலமாகவும் தன்னை ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், எளிமையான அழகோடு, அசத்தலான நடிப்போடும் கவனம் ஈர்க்கிறார். சொல்லாமல் போன காதலை மீண்டும் சொல்ல வேண்டும், என்ற அவரது முயற்சியும், அதற்கான பயணத்தில் ஏற்படும் தன் மன மாற்றங்களையும் அழகியலோடு வெளிப்படுத்தியிருக்கும் அனஸ்வரா ராஜனை படம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றினாலும், அவரது வசன உச்சரிப்பு மட்டும், நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனாவை நினைவுப்படுத்துகிறது. அவர் டப்பிங் பேசியதற்குப் பதில் வேறு ஒருவரை பேச வைத்திருந்தால், அவரது உடல் மொழி அசைவுகளுக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கும்.
அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பார்வையாளர்களின் முதல் காதல் நினைவுகளை கீறி விடும் மாயாஜாலத்தை தன் நடிப்பின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரது கதாபாத்திரங்களின் பயணம் சிறியதாக இருந்தாலும், திரைக்கதையில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது பணி தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை தவிர்த்துவிட்டு, படம் பார்ப்பவர்களும் தங்களது பள்ளி வாழ்க்கையின் நினைவுகளோடு பயணிக்க வேண்டும், என்பதில் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது திரையில் தெரிகிறது. நாயகன் – நாயகி இருவர் மட்டுமே பயணிக்கும் ஒரு கதையை, அவர்கள் மூலமாகவே ரசிகர்களிடத்தில் ரசிக்கும்படி கொண்டு சேர்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின், கேமரா கூட சில இடங்களில் காதல் பேசியிருக்கிறது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாக இருந்தாலும், அன்புடன் என்ற வார்த்தைக்கு அதிகப்படியான பலம் சேர்க்கும் பாடல்களாக இல்லை என்பதையும் மறுக்க முடியாது. பின்னணி இசை காதல் போல் இனிமை. படத்தொகுப்பாளர் சுரேஷ் குமார், இரண்டு கதாபாத்திரங்களின் பயணத்தை மிக நேர்த்தியாகவும், சுருக்கமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் மதன், முதல் காதல் அனுபவங்களை அசைபோடும் நினைவுகளை மையக்கருவாக எடுத்துக்கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான படங்களின் பாதிப்பாக கையாண்டிருந்தாலும், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களுக்கு ஏற்றபடியான காட்சிகளை வடிவமைத்து பார்வையாளர்களை மகிழ்விப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.

காலங்கள் கடந்தாலும், முதல் காதல் அனுபவம் மனதில் அழியாத சுவடுகளாக பதிந்து, எப்போது நினைத்தாலும் அதே உணர்வை கடத்தும் என்பதை நாயகன் மற்றும் நாயகி கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, மேலும் சில கதாபாத்திரங்கள் மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் மதன், அதை வலிமிகுந்த அனுபவங்களாக சொல்லாமல், மகிழ்ச்சியோடு கடந்து செல்லக்கூடிய இனிமையான தருணங்களாக காட்சிப்படுத்தி, பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் காதல் மற்றும் மகிழ்ச்சியோடு பயணிக்க வைத்திருக்கிறார்.
