
“யாதும் அறியான்” இரண்டு நண்பர்களும், அவர்களின் காதலிகளும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு நடு காட்டிற்குள் தங்குகின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் தனிமையான பங்களாவில், ஒரு பெண்ணின் மர்மமான மரணம் நிகழ்கிறது. இந்த சம்பவம் அவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது, மேலும் அதை மறைக்க முயலும் அவர்களின் முடிவுகள், இன்னும் பயங்கரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தக் கதை மர்மத்தையும், மனித உணர்ச்சிகளின் உளவியல் ஆழத்தையும் பற்றி பேசுகிறது. கதையின் முடிவு, எதிர்பாராத திருப்பங்களுடன், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது. அறிமுக நாயகன் தினேஷ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு காதலியிடம் அவர் செய்யும் சில்மிஷங்கள் திரையரங்கை அதிர வைக்கிறது. முதல் பாதியில் அப்பாவியாக நடிப்பவர், இரண்டாம் பாதியில் அவரா இவர்!, என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரானா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமல், விடுதி பணியாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி என அனைவரும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எல்.டி வனப்பகுதியில் இருக்கும் பழைய சொகுசு சொகுசு விடுதியை பார்வையாளர்களுக்கு பீதி ஏற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரு அறையில் நடக்கும் சம்பவங்களையும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரில்லர் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது ஒரு எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு, பல திருப்பங்கள் மூலம் வித்தியாசமான சைக்கோ திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கோபி, 2024 ம் வருடம் நடக்கும் கதையை, 2026 -ம் ஆண்டில் பயணிப்பது போன்று திரைக்கதை அமைத்திருப்பதோடு, அதில் தமிழக அரசியலில் ஏற்பட இருக்கும் மாற்றத்தினை தனது கற்பனையாக காட்சிப்படுத்திய விதம், என பல விசயங்களை எளிமையாக சொல்லியிருந்தாலும், அதன் மூலம் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகனை சுற்றி நடக்கும் அனைத்து மர்மங்களுக்குப் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது, என்று எதிர்பார்ப்பை கொடுக்கும் இயக்குநர் கோபி, படத்தின் ஆரம்பத்தில் நாயகன் மருத்துவரிடம் தன் கதையை சொல்லும் காட்சியை வைத்து, படத்தின் இறுதியில் என்ன நடந்திருக்கும் என்ற சஸ்பென்ஸை அவரே உடைத்திருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்தாலும், அந்த பலவீனத்தை பலமாக மாற்றும் வகையில், நாயகனின் நண்பர்கள் விசயத்தில் இருக்கும் மற்றொரு சஸ்பென்ஸுடன் படத்தை முடித்து இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்திருக்கிறார்.