பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர், வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏமாற்றப்பட்டு மக்களின் பணத்தையும் இழக்கிறார்கள். போலீசில் இருந்து தப்பித்து தலைமறைவாக வாழும் அவர்களை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் மீண்டும் ஒரு பெரிய மோசடியில் ஈடுபட வைக்கிறார். இறுதியில் அந்த திட்டம் வெற்றி பெற்றதா?, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், தனது இறுக்கமான கதாபாத்திர கட்டமைப்பில் இருந்து விலகி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் விதத்திலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் என்றாலும், அதற்கான முழுமையான வாய்ப்பு அர்ஜுன் தாஸுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தன்னால் கமர்ஷியல் நாயகனாகவும் பயணிக்க முடியும் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார். மோசடியால் ஏமாற்றப்பட்டு, அதே மோசடி மூலம் தனது நிலையை மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், யோகி பாபு தனது பாணியை கைவிட்டுவிட்டு புதிதாக ஏதோ செய்ய முயற்சித்திருக்கிறார். தனது வழக்கமான உடல்கேலி வசனங்களை முற்றிலும் தவிர்த்திருப்பவர், தனது சோகமான முகம் மற்றும் நடிப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முடியாமல் போக, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு சில இடங்களில் லேசாக சிரிக்க வைக்கிறார். யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, பிளாக் காமெடி காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான எக்ஸ்பிரஷனோடு சிரிக்க வைக்கிறார். குறிப்பாக யோகி பாபு உடனான அவரது காட்சிகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் அவருக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.
![]()
அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் காட்சிகளை தரமாக படமாக்கியிருந்தாலும், தலைப்புக்கு ஏற்ப காட்சியை காட்ட வேண்டும் என்பதற்காக நகரத்தை அடிக்கடி பருந்து பார்வையில் காட்டுவதை தவிர்த்திருக்கலாம். படத்தொகுப்பாளர் அருள் மோசஸ்.ஏ, திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கு தன்னால் முடிந்த முயற்சியை செய்தாலும், இறுதியில் என்ன நடக்கப் போகிறது என்ற பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், புத்திசாலித்தனம் அல்லது தந்திரமான திட்டங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். முதன்மை கதாபாத்திரங்களின் முகத்தில் சிரிப்பை வெளிக்காட்டாமல் காட்சிகளை கையாண்டிருப்பது புதிதாக இருக்கிறது. அதே சமயம், திரைக்கதை மற்றும் காட்சிகள் நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வை கொடுப்பதால், படம் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது.
