
பிரபலமான மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், தந்தையைப் போல் அவரால் அந்த துறையில் பிரகாசிக்க முடியாமல் போவதோடு, ரவுடி கும்பலால் தனது கையை இழந்து மேஜிக் கலையையும் தொடர முடியாமல் போகிறது.
இதற்கிடையே, யோகி பாபின் கையை வெட்டிய ரவுடி கும்பல், அவருக்கு நெருக்கமான சிறுமியை கொலை செய்து விடுகிறது. இதனால் தனது மேஜிக் திறமையை வைத்து ரவுடி கும்பலை பழிவாங்க திட்டமிடும் யோகி பாபு, அவர்களை எப்படி பழி தீர்க்கிறார், அதன் மூலம் அவருக்கு எப்படிப்பட்ட சிக்கல்கள் வருகிறது, அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார், என்பதை பரபரப்பில்லாமல் சொல்வதே ‘ஜோரா கைய தட்டுங்க’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருந்தாலும், அவரிடம் மக்கள் எதிர்பார்க்கும் நகைச்சுவை குறைவாகவே இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் சாந்தி ராவுக்கு பெரிய வேலை ஒன்றுமில்லை. போலீஸாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜகாஷன், நைரா நிஹர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரியின் பாடல்களும், ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும் சுமார் ரகம். வினீஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ்.கே, பழிவாங்கும் கதையை காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், பரபரப்பு இல்லாமல் சொல்லியிருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது.
யோகி பாபுவை காமெடியனாக மட்டுமே காட்டாமல் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் வினீஷ் மில்லினியம், திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்திருந்தாலும், மெதுவாக நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும், தொடர் கொலைகள் செய்யும் யோகி பாபு, தனது மேஜிக் மூலம் அதில் இருந்து தப்பிப்பது போன்றவை ரசிக்கும்படி இருக்கிறது.