
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் செயல்பட்டு வரும் திருமழிசை காவல் நிலையத்தில் பயிற்சி பெறும் உதவி ஆய்வாளர் எனும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார் கதையின் நாயகனாக தர்ஷன். அந்த காவல் நிலையத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் ஓய்வு பெறும் நிலையில் மூத்த காவலராக லால் பணியாற்றுகிறார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய அனுமதி பெற்ற துப்பாக்கியை சரண்டர் செய்ய வருகிறார். அந்த சரண்டர் செய்யப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களுடன் காணாமல் போகிறது. அதே தருணத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சுஜித் சங்கர்- தேர்தல் நிதியாக அரசியல் கட்சி ஒன்றிற்கு இந்திய மதிப்பில் பத்து கோடி ரூபாயை நிதியாக வழங்குகிறார். இந்த நிதியும் சிலரின் சதி மற்றும் பேராசை காரணமாக உரியவர்களிடம் சென்று சேராமல்.. இடையில் காணாமல் போகிறது. அரசியல் கட்சியின் உள்ளூர் பிரதிநிதி ஒருவர் தன்னுடைய அரசியல் எதிரியை பழிவாங்குவதற்காக துப்பாக்கி ஒன்றினை சொந்தமாக வாங்க விரும்புகிறார். இதற்காக துப்பாக்கியை கள்ள சந்தையில் விற்கும் கும்பலை தொடர்பு கொள்கிறார். அவர்களை சந்திக்கவும் பயணிக்கிறார். இந்த மூன்று விடயங்களும் ஓரிடத்தில் சந்திக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? என்ன ஆனது? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் தர்ஷனுக்கு காவல்துறை சீறுடை கச்சிதமாக பொருந்துவதோடு, கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் தர்ஷன், ஆக்ஷன் காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நல்லவனாக இருப்பதனால் இந்த உலகத்தில் வாழ முடியாது, என்பதை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் தலைமை காவலராக நடித்திருக்கும் லால், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சுஜித், ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். எதிரிகளை வேட்டையாடுவதும், போலீஸ்காரர்களையே மிரட்டுவது, போட்டுத்தள்ளுவது என்று அவரது நடவடிக்கை சற்று ஓவராக இருந்தாலும், அளவான நடிப்பு மூலம் கனகுவாக மக்கள் மனதில் சுஜித் இடம் பிடித்து விடுகிறார். முனிஷ்காந்த் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பாடினி குமார், அருள் டி.சங்கர், நடிகராகவே நடித்திருக்கும் மன்சூர் அலிகான், கெளசிக், சுந்தரேஸ்வரன் என அனைத்து நட்சத்திரங்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் மிகச்சிறப்பாக படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் விகாஷ் படிஷாவின் பின்னணி இசை படத்தின் பரபரப்பையும், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. சாதாரண விசயத்தை கூட மிக சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதை படத்தொகுப்பாளர் ரேணு கோபால் தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் நிரூபித்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் கவுதமன் கணபதி, மிக சாதாரணமான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு, பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம், முழுமையான ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.காவல்துறை இயங்கும் விதம், காவல் நிலையத்தில் இருக்கும் ஈகோ மற்றும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இயல்பாகவும், நம்பகத்தன்மையோடும் சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் கவுதமன் கணபதி, இரண்டரை மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு படத்துடன் பார்வையாளர்களையும் பதற்றத்துடன் பயணிக்க வைத்து விடுகிறார்.