எழுத்தாளர் ஜெபநேசன் ( லோகு) மன அழுத்தம் காரணமாக உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வடிகால் தேடுவதற்காக நெடுந்தொலைவு நெடுஞ்சாலை பயணத்தை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக.. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைகிறார். இது தொடர்பாக வழக்கு ஒன்றை பதிவு செய்து காவல்துறை விசாரிக்க தொடங்குகிறது. காவல்துறை அதிகாரியான மகுடபதி( அர்ஜுன் ) – எழுத்தாளர் ஜெபநேசனின் மரணம் குறித்த விசாரணையை தொடங்குகிறார். மனநலம் குறித்த சவால் கொண்ட இளம் மாற்று திறனாளிகளுக்கு பேச்சுப் பயிற்சி- நடத்தை பயிற்சி -உள்ளிட்ட பல பயிற்சிகளை ஒருங்கிணைந்து வழங்கி அவர்களுக்கான பராமரிப்பு சேவையை மீரா ( ஐஸ்வர்யா ராஜேஷ்) செய்து வருகிறார். இவரிடம் கீதா ( அபிராமி வெங்கடாசலம்) எனும் பெண்மணியின் மாற்றுத்திறனாளி பிள்ளையும் சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் மீரா- ஆதி( பிரவீண் ராஜா) எனும் சுகாதாரத் துறையில் ஊழியராக பணியாற்றுபவரை சந்தித்து காதலிக்க தொடங்குகிறார். ஆதியை சந்திப்பதற்காக மீரா, ஆதியின் இல்லத்திற்கு வரும்போது அங்கு அவரது தாய்- ஆதியை பற்றிய ஒரு உண்மையை மீராவிடம் சொல்கிறார். அதன் பிறகு மீராவின் நடவடிக்கை என்ன? என்பதையும், எழுத்தாளர் ஜெப நேசன் கொலைக்கான பின்னணி என்ன? கொலையாளி யார்? என்பதை காவல்துறை அதிகாரியான மகுடபதி கண்டறிந்தாரா? இல்லையா? என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

காவல்துறை சீருடை அணியாமல் வலம் வந்தாலும், தனது கம்பீரமான நடிப்பு மூலம் காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் மிளிர்கிறார். மறைத்து வைக்கப்பட்ட தடயங்கள் மூலம் விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று தனது புலன் விசாரணை மூலம் திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்லும் அர்ஜூன், தனது பாணியில் அட்டகாசமான சண்டைக்காட்சி ஒன்றையும் நிகழ்ச்சி தனது ரசிகர்களை திருப்தியடைய செய்திருக்கிறார். கதையின் நாயகி என்றாலும், குறிப்பிட்டு சொல்ல முடியாத சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் அசத்தியிருக்கிறார். ஆட்டிசம் பாதித்த சிறுமியாக நடித்திருக்கும் அனிகா, மிக இயல்பாக நடித்து வியக்க வைக்கிறார். பிரவீன் ராஜா, லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு. இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பளித்துள்ளது. ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, ஆரம்பக் காட்சியிலேயே மிரட்டி விடுகிறார். அடுத்தடுத்த காட்சிகளில் வேகத்தை அதிகரித்து பார்வையாளர்களிடமும் பதற்றத்தை தொற்றிக் கொள்ள செய்பவர், மின் தூக்கியில் நடக்கும் சண்டைக்காட்சியை அட்டகாசமாக படமாக்கி பாராட்டு பெறுகிறார். படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை சரியான முறையில் நகர்த்தி படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் லக்ஷ்மணன், உண்மை சம்பவம் ஒன்றை கதைக்கருவாக வைத்துக் கொண்டு, விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை, அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் பயணிக்கும் திரைக்கதை, பார்வையாளர்களுக்கு சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.
